கொள்ளலாம். காரார் கடல் நஞ்சை உண்டுகந்தது இறைவனது அறக்கருணையையும், போரார் புரத்தை எரித்தது அவனது மறக் கருணையையும் காட்டுகின்றன. போரார் புரம் பாடலாவது, படைகள் பல இருக்க, சிரிப்பினாலே முப்புரத்தை எரி செய்ததைப் பாடுதலாம். 'போர் ஆர் புரம்' என்பதை, ' புரம் போர் ஆர்தல்' என மாற்றிக்கொள்க. இதனால், இறைவனது கருணை வகை கூறப்பட்டது. 10 பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க் கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள் ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே போலும் புகழ்பாடிக் பூவல்லி கொய்யாமோ. பதப்பொருள் : பாலும் அமுதமும் தேனுடன் ஆம் - பாலும் அமுதமும் தேனோடு கலந்தது போன்ற, பராபரமாய் - மிகமேலான பொருளாய், கோலம் குளிர்ந்து - குளிர்ச்சியான வடிவத்தைக் கொண்டு, உள்ளம் கொண்ட பிரான் - என் உள்ளத்தை இடமாகக் கொண்ட பெருமானது, குரை கழல்கள் - ஒலிக்கின்ற சிலம்பையணிந்த திருவடிகளே, ஞாலம் பரவுவார் - உலகத்தாரால் போற்றப்படுகின்ற பெரியோர்க்கு, நன்னெறியாம் - நன்னெறியாகும், அந்நெறியே - அந்நெறியின்படியே, புகழ் பாடி - அத்திருவடிகளின் புகழினைப் பாடி, பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம். விளக்கம் : 'பாலும் அமுதமும் தேனுடனாம்' என்றது, இறைவன் அவ்வளவு இன்பமானவன் என்பதைக் காட்டும்பொருட்டு. குளிர்ச்சிதான் உள்ளத்தைக் கவருமாதலின், 'கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான்' என்றார். உலகிலே இறைவன் திருவடி வணக்கமே உயர்ந்த நெறியாதலின், 'ஞாலம் பரவுவார் நன்னெறியாம்' என்றார். போலும் - அசை. இதனால், இறைவன் திருவடி வணக்கத்தின் சிறப்புக் கூறப்பட்டது. 11 வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோனவனாய் நின்று கூடலிலாக் குணக்குறியோன் ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெயப் போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. பதப்பொருள்: வானவன் - இந்திரன், மால் அயன் - திருமால் பிரமன், மற்றும் உள்ள தேவர்கட்கும் - மற்றுமுள்ள தேவர்களுக்கும், கோனவனாய் நின்று - தலைவனாகி நின்று, கூடல் இலாக் குணக் குறியோன் - குணமும் வடிவமும் பொருந்துதல் இல்லாத
|