358


இறைவன். நெடுங்கடல் ஆன - நெடிய கடலில் உண்டான, ஆலாலம் - ஆலகால நஞ்சை, அமுது செய - பருக, போனகம் ஆன ஆ - ஆது உணவான விதத்தைப் பாடி, பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம்.

விளக்கம் : முக்குணத்துக்கு அப்பாற்பட்டவனாதலின் குணம் இல்லாதவன் என்றார். ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றும் இன்றாதலின் குறி இல்லாதவன் என்றும் கூறினார்; 'இப்படியன் இந்நிறத்தின் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக்காட்டொணாதே' என்றார் திருநாவுக்கரசரும். 'நஞ்சை அமுதாகச் செய்த செயற்கரிய செயலாதலின், அதனைப் பாடுவோம்' என்பார், 'ஆலாலம் அமுதுசெயப் போனகம் ஆனவா' என்றார். 'பாடி' என்பது வருவிக்க நின்றது.

இதனால், இறைவன் குணம் குறி கடந்து நிற்பவன் என்பது கூறப்பட்டது.

12

அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும் நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.

பதப்பொருள் : அன்று - அந்நாளில், ஆலநிழற்கீழ் - கல்லால நீழலில், அருமறைகள் தான் அருளி - அருமையாகிய வேதப்பொருள்களைத் தானே உபதேசம் செய்தவனும், வானவர் - தேவர்களும், மாமுனிவர் - பெரிய முனிவர்களும், நன்றாக நாள்தோறும் நின்று - நன்றாகத் தினந்தோறும் நின்று, ஆர் ஏத்தும் - நிரம்பத் துதிக்கின்ற, நிறைகழலோன் - அழகு நிறைந்த கழலையுடையவனும் ஆகிய இறைவனது, புனை கொன்றை - அணிந்த கொன்றை மலரின், பொன் தாது பாடி - பொன் போன்ற மகரந்தத்தைப் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ - நாம் பூவைக் கொடியினின்றும் கொய்வோம்.

விளக்கம் : அருமறைகள் அருளியது அறத்தை விளக்கவும், நிறைகழலைப் புனைந்தது வீரத்தைக் காட்டவும் ஆம். எனினும், இரண்டும் கருணையேயாம். 'அருளி' என்ற எச்சம் 'கழலோன்' என்றதனோடு முடிந்தது. தார் பாடல், பண்டைய மரபு.

இதனால், இறைவனது இயல்பு கூறப்பட்டது.

13

படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்
கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ.