பதப்பொருள் : ஏகம்பம் மேயபிரான் - திருவேகம்பத்தில் உறைகின்ற பெருமான், என் உள்ளே படமாக - எனது உள்ளமே கிழியாக, தன் இணைப்போது அளித்து - தனது இரண்டு திருவடி மலர்களையே சித்திரமாக அதில் எழுதக் கொடுத்து, இங்கு இடமாகக் கொண்டிருந்து - இந்த உள்ளத்தை இடமாகக் கொண்டிருந்தே, தடம் ஆர் மதில் - பெருமையமைந்த மதில் சூழ்ந்த, தில்லை அம்பலமே - தில்லையம்பலத்தையும், இடம் ஆ - இடமாகக் கொண்டு, நடம் ஆடும் ஆ பாடி - நடனம் ஆடும் விதத்தைப் பாடி பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம். விளக்கம் : உள்ளம், கிழி ; அஃதாவது, படத்தை வரைவதற்கு உரிய துணி. திருவடி, சித்திரம். உள்ளம் படமாக என்றமையால், திருவடி சித்திரமாக என்பது விளங்குகிறது. 'உயிரா வணமிருந் துற்று நோக்கி உள்ளக் கிழியி னுருவெழுதி' என்ற திருநாவுக்கரசர் வாக்கைக் காண்க. இறைவன் உள்ளே நெஞ்சத்திலும், புறத்தே அம்பலத்திலும் ஆடுகின்றான் என்பார், 'இங்கு இடமாகக் கொண்டிருந்து தில்லை அம்பலமே தானிடமா நடமாடும்' என்றார். இதனால், இறைவன் திருக்கூத்து நிகழும் இடம் கூறப்பட்டது. 14 அங்கி அருக்கன் இராவணன்அந் தகன்கூற்றன் செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும் பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப் பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. பதப்பொருள் : அங்கி - அக்கினி தேவனும், அருக்கன் - சூரியனும், இராவணன் - இராவணனும், அந்தகன் - அந்தகாசுரனும், கூற்றன் - இமயனும், செங்கண் அரி - செந்தாமரைக் கண்ணனாகிய திருமாலும், அயன் - பிரமனும், இந்திரன் - இந்திரனும், சந்திரன் - சந்திரனும், பங்கம் இல் தக்கனும் - பெருமை குறைதல் இல்லாத தக்கனும், எச்சனும் - யாகதேவனும், தம் பரிசு அழிய - தமது தன்மை அழியும்படி, பொங்கிய - சினந்த, சீர் பாடி - புகழைப் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ - நாம் பூவைக் கொடியினின்றும் கொய்வோம். விளக்கம் : இராவணனும், அந்தகனும், கூற்றுவனும் ஒழிய ஏனையோர் தக்க யாகத்தில் தண்டிக்கப் பெற்றவர். இராவணன் கயிலையைப் பெயர்க்க முயன்றபோது, இறைவன் தன் வலக்கால் விரலைச் சற்றே ஊன்ற, சிரம் முதலாயின நெரிபட்டுத்
|