360


துன்புற்றான்; பின்னர்ச் சாமகானம் பாடி அருள் பெற்றான். மற்ற வரலாறு முன்னர்க் கூறப்பட்டது.

அந்தகாசுரனை அழித்தது:

அந்தகாசுரன் என்னும் அசுரன் தேவர் முதலாயினாரைப் பலகாலும் துன்புறுத்தி வந்தான். சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து அநேக வரம் பெற்றவனாதலின், அவனை யாராலும் அழிக்க முடியவில்லை. தேவர்கள் அவனுக்குப் பயந்து பெண் வடிவம் கொண்டு கயிலையில் இறைவியின் கணங்களோடு வாழ்ந்திருந்தார்கள். இதை அறிந்து கயிலையில் போருக்கு வர, சிவபெருமான் வயிரவமூர்த்தியை அனுப்பினார். அவர் சென்று அவனைச் சூலத்தில் கோத்து நடனம் செய்தார். (காஞ்சிப் புராணம்).

இதனால், இறைவனது மறக்கருணை கூறப்பட்டது.

15

திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு
மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட
புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.

பதப்பொருள் : திண் - வலிய, போர் - போர்த்தொழிலையுடைய, விடையான் - இடபத்தை ஊர்தியாகவுடையவனும், சிவபுரத்தார் - சிவபுரத்தில் உள்ளவர்க்கு, போர் ஏறு - போரில் வல்ல சிங்கம் போன்ற தலைவனுமாகிய இறைவன், மண்பால் - மண்ணுலகத்தில், மதுரையில் - மதுரைப்பதியில், பிட்டு - பிட்டினை, அமுது செய்தருளி - உண்டருளி, தண்டாலே - பிரம்பினாலே, பாண்டியன் - பாண்டியனானவன், தன்னைப் பணி கொண்ட - தன்னை ஏவல் கொண்டதனால் உண்டான, புண்பாடல் பாடி - புண்ணைப் பாடும் பாடலைப் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ - நாம் பூவைக் கொடியினின்றும் கொய்வோம்.

விளக்கம் : சிவபுரம் - சரியை, கிரியை, யோகம் என்பவற்றில் நின்றோர் அடையும் பதம். இறைவன் தன் அடியார்கள் வணங்கச் சிவலோகத்தில் வீற்றிருக்கின்றான் என்பார், 'சிவபுரத்தார் போரேறு' என்றார். எனினும், அவனது எளிமையைக் காட்ட வந்திக்காக மதுரைக்கு வந்து, உதிர்ந்த பிட்டைக் கூலியாகக்கொண்டு தொண்டு செய்தான் என்பார், 'மதுரையிற் பிட்டமுது செய்தருளி' என்றார். தொண்டு செய்யும்போது பாண்டியனால் மொத்துண்டு புண்பட்டது மிக உருக்கமான திருவிளையாடலாதலின், 'பாண்டியன் தன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடி' என்றார்.

இதனால், இறைவனது எளிவந்த கருணை கூறப்பட்டது.

16