361


முன்னாய மாலயனும் வானவருந் தானவரும்
பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே
என்னாகம் உள்புகுந் தாண்டுகொண்டான் இலங்கணியாம்
பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.

பதப்பொருள் : என் ஆகம் உள்புகுந்து - என் மனத்துள் புகுந்து, ஆண்டுக்கொண்டான் - என்னை ஆண்டுகொண்டவனது, பொன் ஆர் திருவடி - பொன் போலும் பொருந்திய திருவடியை, முன்னாய - முதன்மையுடையவராகிய, மால் அயனும் - திருமாலும் பிரமனும், வானவரும் - தேவர்களும், தானவரும் - அசுரர்களும், அறியார் - அறியமாட்டார்கள், அங்ஙனமிருக்க ; போற்றுவதே - அது எம்மால் துதிக்கப்படுவதோ, இலங்கு அணியாம் - விளங்குகின்ற அணியாகிற, பல் நாகம் பாடி - பல பாம்புகளைப் புகழ்ந்து பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ - நாம் பூவைக் கொடியினின்றும் கொய்வோம்.

விளக்கம் : செருக்குடைமையினால் திருமாலும் பிரமனும் இறைவனைக் காண முடியாது என்பது முன்னர்க் கூறப்பட்டது. வானவர் இன்பத்தில் திளைப்பவர் ; தானவர் செருக்குடையவர், ஆதலின், இவர்களாலும் இறைவனைக் காண முடியாது என்பார், 'வானவரும் தானவரும் தாமளியார்' என்றார். போற்றுவதே, ஏகாரம் எதிர்மறை; போற்ற முடியாது என்னும் பொருளது. மாலையைப் புகழ்வது போல அணியைப் புகழ்ந்தபடி.

இதனால், இறைவனை அவன் அருளால்தான் காண முடியும் என்பது கூறப்பட்டது.

17

சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய் அடியேன் அகம்மகிழத்
தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ.

பதப்பொருள் : அடியேன் - அடியேன், தேர் ஆர்ந்த வீதி - தேர் பொருந்திய தெருக்களையுடைய, பெருந்துறையான் - திருப்பெருந்துறையையுடையவன், சீர் ஆர் - சிறப்புப் பொருந்திய, திருவடி - தனது திருவடிமேலணிந்த, திண்சிலம்பு - வலிய சிலம்புகள், சிலம்பு ஒலிக்கே - ஒலிக்கின்ற ஒலிக்கே, ஆராத ஆசையதாய் - அடங்காத ஆசையை உடையேனாகி, அகம் மகிழ - மனம் மகிழுமாறு, திருநடம் செய் - திருநடனம் செய்கின்ற, பேரானந்தம் பாடி - பேரானந்தத்தைப் பாடி, பூவல்லி கொய்யாமோ - பூவைக் கொடியினின்றும் கொய்வோம்.

விளக்கம் : 'பாதச் சிலம்பொலியைக் கேட்க வேண்டுமென்றே பெருவிருப்பம் உடையேன்' என்பார், 'சிலம்பொலிக்கே ஆராத