368


வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீபற தொடர்ந்த பிறப்பற உந்தீபற.

பதப்பொருள் : தொடர்ந்த பிறப்பு அற - தொடர்ந்து வருகின்ற நம் பிறப்பு நீங்கும்படி, வெஞ்சின வேள்வி - கொடிய கோபத்துக்குக் காரணமாகிய வேள்வியில், வியாத்திரனார் - யாககுருவாகிய வியாத்திரனாரது, தலை துஞ்சின ஆ பாடி - தலை அழிந்த விதத்தைப் பாடி, உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக.

விளக்கம் : தக்கன், எச்சன், வியாத்திரன் ஆகிய மூவரின் தலைகளும் அறுபட்டன என்பதாம். தக்கனது வேள்விக்குக் குருவாய் உடனிருந்து உதவினமையால் கொடிய தண்டனை அடைந்தான் என்பார், 'வியாத்திரனார் தலை துஞ்சின வா' என்றார். சிவபெருமானையே குருவாகக் கொண்டால் பிறவிப்பெருங்கடல் நீந்தலாம் என்பார், 'தொடர்ந்த பிறப்பற உந்தீ பற' என்றார்.

இதனால், இறைவனைப் பாடினால் பிறவி அறும் என்பது கூறுப்பட்டது.

10

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீபற கொங்கை குலுங்கநின் றுந்தீபற.

பதப்பொருள் : ஆட்டின் தலையை - அறிவில்லாத ஆட்டினது தலையை, விதிக்குத் தலையாக - தக்கனுக்குத் தலையாக, கூட்டிய ஆ பாடி - பொருத்தின விதத்தைப் பாடி, கொங்கை குலுங்க நின்று - தனங்கள் அசைய நின்று, உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக.

விளக்கம் : விதி - பிரமன். அவன் மகனாதலின், தக்கனுக்குச் 'சிறு விதி' என்ற பெயர் உண்டு. அதனால் தக்கனை 'விதி' என்றார். விதி, அறிவில் சிறந்தவன்; ஆடு, அறிவில் தாழ்ந்தது. சிவநிந்தனை செய்ததால் தக்கன் அறிவில்லாத ஆட்டின் தலையைப் பெற்றான் என்பார். 'ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டியவா பாடி,' என்றார்.

இதனால், சிவநிந்தனை செய்தோர் அழியாப்பழி எய்துவர் என்பது கூறப்பட்டது.

11

உண்ணப் புகுந்த பகன்ஒளித் தோடாமே
கண்ணைப் பறித்தவா றுந்தீபற கருட்கெட நாமெலாம் உந்தீபற.

பதப்பொருள் : உண்ணப் புகுந்த - தக்கன் வேள்வியில் அவிர்ப் பாகத்தை உண்ண வந்த, பகன் - பகன் என்பவன், ஒளித்து ஓடாமே - மறைந்து ஓடாதவண்ணம், கண்ணைப் பறித்தவாறு - அவனது கண்களைப் பிடுங்கின விதத்தை, நாம் எலாம் - நாம் எல்லோரும், கருக்கெட - பிறவி அழியும்படி பாடி, உந்தி பற - தோழி, உந்தி பறப்பாயாக.