விளக்கம் : பகன், பன்னிரு சூரியர்களுள் ஒருவன். ஒளியைக் கொடுப்பவன் சூரியன். ஒளியையுடையது கண்ணே. ஆதலின், அவன் தக்கன் யாகத்தில் அவியுண்ண வந்த தீமைக்காகக் கண்ணைப் பிடுங்கினார் என்பார், 'பகன் கண்ணைப் பறித்தவாறு' என்றார். இதனால், ஒளியைத் தரும் சூரியனே கண்ணிழந்தமை கூறப்பட்டது. 12 நாமகள் நாசி சிரம்பிர மன்படச் சோமன் முகம்நெரித் துந்தீபற தொல்லை வினைகெட உந்தீபற. பதப்பொருள்: தொல்லை வினை கெட - நம் பழவினைகள் அழியும்படி, நாமகள் நாசி - தக்கன் வேள்வியில் சரஸ்வதியின் மூக்கும், பிரமன் சிரம்பட - பிரமன் தலையும் அறுபட, அவற்றோடு, சோமன் முகம் நெரித்து - சந்திரன் முகத்தைத் தேய்த்து அழித்ததைப் பாடி, உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக. விளக்கம் : தக்க யாகத்தில் வீரபத்திரர் கலைமகளை மூக்கரிந்ததாகவும், பிரமனைக் குட்டியதாகவும், சந்திரனைப் பாதங்களால் தேய்த்ததாகவும் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. திருவருளால் பழவினை நீங்குமாதலின், இறைவனையே பாட வேண்டும் என்பார், 'தொல்லை வினைகெட் என்றார். இதனால், சிவாபராதம் செய்தவர் யாரும் தப்ப முடியாது என்பது கூறப்பட்டது. 13 நான்மறை யோனு மகத்திய மான்படப் போம்வழி தேடுமா றுந்தீபற புரந்தரன் வேள்வியி லுந்தீபற. பதப்பொருள் : வேள்வியில் - தக்கனது யாகத்தில், நான்மறையோனும் - பிரமனும், மகத்து இயமான் பட - யாகத்துக்கு எஜமானனாகிய தக்கனும் அழிய, புரந்தரன் - இந்திரன், போம் வழி தேடும் ஆறு - தப்பி ஓடும் வழியைத் தேடிய விதத்தைப் பாடி, உந்தீ பற - தோழி, உந்தி பறப்பாயாக. விளக்கம் : பிரமனும் அவன் புத்திரனாகிய தக்கனும் மிகப் பெரியவர்கள். அவர்களே அழிந்தார்கள் என்றபோது தனக்கு அழிவு நேர்தல் திண்ணம் என்று இந்திரன் அஞ்சி ஒடினான் என்பார், 'புரந்தரன் போம்வழி தேடுமாறு' என்றார். இதனால், இறைவனே நன்னெறியைக் காட்ட வல்லவன் என்பது கூறபபட்டது. 14 சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற.
|