செயலெல்லாம் தவமாயின என்பதாம். 'கருணை' என்பது, அதனைப் பாடும் பாடலுக்கு ஆயிற்று. ஆல் உருபு ஒடுருபின் பொருளில் வந்தது. இதனால், இறைவன் சித்ததைச் சிவமாக்க வல்லவன் என்பது கூறப்பட்டது. 6 தீதீல்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப் பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். பதப்பொருள் : தீது இல்லை - தீமை சிறிதும் இல்லாத, மாணி - பிரமசாரியாகிய சண்டேசுர நாயனார், சிவகருமம் சிதைத்தானை - சிவபூசையை அழித்தவனும், சாதியும் வேதியன் - குலத்தால் அந்தணனும், தாதைதனை - முறையால் தந்தையுமாகிய எச்சதத்தனை, தாள் இரண்டும் சேதிப்ப - கால்கள் இரண்டையும் வெட்ட, பாதகமே - அப்பாவச் செயலாலேயே, ஈசன் திருவருளால் - இறைவனது திருவருளினால், தேவர் தொழ - தேவர்கள் தம்மை வணங்கும்படி, சோறு பற்றின ஆ - இறைவனது பரிகலம் முதலியவற்றைப் பெற்ற வரலாற்றைப் பாடி, தோணோக்கம் - நாம் தோணாக்கம் ஆடுவோம். விளக்கம் : தாதையின் தாள் எறிந்த செயல் கொடுமையாயினும், எண்ணத்தில் கொடுமையில்லையாதலின், 'தீதில்லை மாணி' என்றார். அவர் செய்த செயல் இறை பணியேயாதலின், தீமையும் நன்மையாய் முடிந்தது என்பார், 'பாதகமே சோறு பற்றினவா' என்றார். "அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும் பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும் வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே" என்ற சிவஞான சித்தியைக் காண்க. பாதகமே நன்மையானது : சோழ நாட்டிலே திருச்சேய்ஞலூர் என்ற ஊரில் சண்டேசுர நாயனார் அவதாரம் செய்தார். இவரது பிள்ளைத்திருநாமம் விசாரசருமர் என்பது. இவர் தந்தையின் பெயர் எச்சதத்தன். பூர்வ புண்ணியப் பயனாக இவர் இளமையிலே வேத சாத்திரங்களை உணர்ந்தார்; ஒரு நாள் பசுக்களை மேய்க்கும் ஆயன் ஒரு பசுவை அடிக்கக் கண்டார்; அதனைக் கண்டு மனம் பொறாது அன்று முதல் தாமே பசுக்களை மேய்க்கும் பணியை மேற்கொண்டார். பசுக்கூட்டம் பெருகிப் பால் வளமும் மிகுந்தது. பசுக்களிடம் இவர்
|