காட்டிய பரிவுக்குப் பசுக்களும் இவரைக் கண்டபோது பாலைச் சுரந்தன. இது இறைவனது அபிடேகத்துக்கு ஆகுமென்று நாயனார், மண்ணியாற்றங்கரையில் மணலால் இலிங்கம் அமைத்து, அபிடேகம் செய்து, பூசனை புரிந்து வந்தார். இதனை அறிந்த ஊரார் எச்ச தத்தனிடம் முறையிட்டனர், தந்தையும் மண்ணியாற்றங் கரையில் குரா மரத்தில் மறைந்திருந்து இப்பூசனையைக் கண்டான்; மனம் தாங்கமாட்டாது வெகுண்டு தன் குமாரனைக் கோலால் அடித்தான். அதனையும் உணராது பூசனை புரியவே, காலால் பாற்குடந்தை இடறினான். விசாரசருமர் சிவ பூசைக்கு இடையூறு வந்ததே என்று எண்ணித் தந்தை என்றும் வேதியன் என்றும் பாராது, பக்கத்திலே கிடந்த கோலை எடுத்து எறிந்தார். அதுவே மழுவாய் மாறித் தாளைத் துண்டித்தது. இறைவன் ரிடபாரூடனாகக் காட்சி கொடுத்துச் சண்டேச நாயனாரைத் தன் மகனாராக 'நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காக' என்று சொல்லிச் சண்டேசுர பதவியை அளித்தான். (பெரிய புராணம்). இதனால், சிவபூசையினது பெருமை கூறப்பட்டது. 7 மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர் வானம் தொழும்தென்னன் வார்கழலே நினைந்தடியோம் ஆனந்தக் கூத்தன் அருள்பெறின்நாம் அவ்வணமே ஆனந்த மாகிநின் றாடாமோ தோணோக்கம். பதப்பொருள் : மங்கை நல்லீர் - மங்கைப்பருவத்தையுடைய நல்ல பெண்களே, அடியோம் - அடியோங்கள், ஆனந்தக் கூத்தன் அருள் பெறின் - ஆனந்தத் தாண்டவம் செய்கின்ற இறைவனது திருவருளைப் பெற்றுள்ளோமென்றால், மானம் அழிந்தோம் - அபிமானம் கெட்டோமாயினோம், மதி மறந்தோம் - நம்மை மறந்தோமாயினோம், ஆகையால், நாம் அவ்வணமே - நாம் அவ்வாறே, வானம் தொழும் தென்னன் - விண்ணுலகத்தவர் வணங்குகின்ற தென்னவனாகிய அவனது, வார்கழலே நினைந்து - நீண்ட வீரகழலையணிந்த திருவடிகளையே நினைந்து, ஆனந்தம் ஆகி நின்று - ஆனந்தமே வடிவாய் நின்று, தோணோக்கம் ஆடாமோ - தோணோக்கம் ஆடுவோம். விளக்கம் : மானம் அழிதல், உலகப்பற்று அறுதல். மதி மறத்தல், ஆன்மபோதம் கெடுதல், இறைவனது திருவருளைப் பெற்றமையால், உலகப்பற்றை நீங்கினோம் என்பார். 'மானம் அழிந்தோம் மதிமறந்தோம்' என்றார். இனி, இறைவன் திருவடி ஞானம் உண்டாயின், பேரின்பம் உண்டாகும் என்பார், 'வார் கழலே நினைந்து ஆனந்தமாகி நின்றாடாமோ' என்றார். இதனால், ஆன்மபோதம் அற்று ஆனந்தமாய நிற்றல் வேண்டும் என்பது கூறப்பட்டது. 8
|