எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக் கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின் எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம். பதப்பொருள் : எண்உடை - உயர்வாக எண்ணத் தகுந்த, மூவர் இராக்கதர்கள் - மூவர் அரக்கர்கள், எரி பிழைத்து - முப்புரம் எரித்தபோது பிழைத்து, கண்ணுதல் எந்தை - நெற்றிக் கண்ணையுடைய எம் தந்தையின், கடைத்தலைமுன் - வாயிற் படியில், நின்றதற்பின் - துவாரபாலகராய் நின்ற பிறகு, எண் இலி இந்திரர் - அளவு கடந்த இந்திரர்களும், எத்தனையோ பிரமர்களும் - எத்தனையோ பிரமதேவர்களும், மண்மிசை - மண்ணை உண்ட, மால் பலர் - அநேக திருமால்களும், மாண்டனர் - இறந்தனர், தோணோக்கம் - என்று நாம் தோணோக்கம் ஆடுவோம். விளக்கம் : முப்புரம் எரித்த போது தப்பிப் பிழைத்த சுதன்மன், சுசீலன், சுபுத்தி ஆகிய மூவரும் எண்ணுடை மூவராவார். சிவபூசையின் பலனாக இறைவன் திருமுன் இவர்களுள் இருவர் துவாரபாலகராகவும், ஒருவர் குடமுழா வாசித்துக்கொண்டும் இருக்கின்றனர். (சிவரகசியம்). இவர்கள் அழியாத் தன்மை பெற்றனர் என்பதாம். ஆனால், இந்திரன் முதலியோர் அழிவர் என்பதைக் காட்ட, 'எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால்பலர் மாண்டனர்' என்றார். 'எண்ணிலி' என்றதில் இகரம் சாரியை. மால் மண் மிசைந்தது : கண்ணன், ஆய்ப்பாடியில் யசோதையின் இல்லத்தில் வளரும் போது மண்ணை உண்டு விளையாடினான்; தாய் சினந்து கேட்கவே, வாயைத் திறந்து காட்டினான். அப்பொழுது அதில் அகில உலகமும் தெரிந்தது என்பதாம் (பாகவதம்). இதனால், இறைவன் அருள் பெற்றோர் அழிய மாட்டார் என்பது கூறப்பட்டது. 9 பங்கயம் ஆயிரம் பூவினில்ஒர் பூக்குறையத் தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமே சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற் கருளியவா றெங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ. பதப்பொருள் : ஆயிரம் பங்கயப் பூவினில் - ஆயிரம் தாமரை மலர்களுள், ஓர் பூக் குறைய - ஒரு மலர் குறைய, தம் கண் இடந்து - தமது கண்ணைத் தோண்டி, அரன் சேவடிமேல் சாத்தலுமே - சிவபெருமானது திருவடிமீது சாத்தலும், சங்கரன் - சங்கரனாகிய, எம்பிரான் - எம்மிறைவன், மாற்கு - திருமாலுக்கு, சக்கரம் அருளிய ஆ - சக்கரப்படை அளித்த வரலாற்றை, எங்கும் நாம் பரவி -
|