387


என்றார். நஞ்சை உண்டதும், பிறையை அணிந்ததும் இறைவனது பெருங்கருணை என்பதாம். ஆலகால விடத்திற்கு அஞ்சி ஓடி வந்த தேவர்களை இகழாது அபயம் அளித்தும், அவர்கள் வேண்டுகோளை ஏற்று நஞ்சை உண்டும் காத்தருளினமையால், 'நாணாமே உய்ய ஆட்கொண்டருளி' என்றார். சென்னி, ஆகுபெயர்.

இதனால், இறைவனது குணத்தைப் பாட வேண்டும் என்பது கூறப்பட்டது.

5

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.

பதப்பொருள் : போது ஆடு - தாமரை அரும்பு போன்ற, பூண்முலையீர் - அணிகளோடு கூடிய தனங்களையுடைய பெண்களே, மாது ஆடு பாகத்தன் - மங்கைதங்கு பங்கையுடையவனும், உத்தரகோச மங்கை - திருவுத்தரகோச மங்கையிலுள்ள, தாது ஆடு கொன்றைச் சடையான் - மகரந்தங்களையுடைய கொன்றை மாலையை அணிந்த சடையையுடையவனும், அடியார் உள் - தன்னடியார்களுள்ளே, நாயேனை - நாய் போன்ற என்னை, கோதாட்டி - சீராட்டி, ஆட்கொண்டு - அடிமை கொண்டு, என் தொல் பிறவித் தீது - என் முற்பிறப்பில் உண்டாகிய வினை, ஓடாவண்ணம் - மேலெழுந்து பற்றாதபடி, திகழ - யான் ஞானத்தோடு விளங்க, பிறப்பு அறுப்பான் - பிறவித்தளையை அறுப்பவனுமாகிய இறைவனது, காது ஆடு குண்டலங்கள் பாடி - திருச்செவிகளில் ஆடுகின்ற குண்டலங்களைப் பாடி, அன்பால் கசிந்து - அன்போடு உருகி, பொன்னூசல் ஆடாமோ - நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

விளக்கம் : தனங்களுக்கும் தாமரை அரும்பு உவமை கூறப்படுமாதலின், போது என்றதற்குத் தாமரை அரும்பு என்று பொருள் கொள்ளப்பட்டது. பல பிறவிகளில் செய்த வினைகள் அறவே, பிறவித் துன்பம் அறுமாதலின், 'என் தொல்பிறவித் தீதோடா வண்ணம் பிறப்பறுப்பான்' என்றார்.

இதனால், இறைவனது அணியைப் பாட வேண்டும் என்பது கூறப்பட்டது.

6

உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்.