'மான் பழித்து ஆண்ட' என்பது, தேவியினது நோக்கத்தின் கவர்ச்சியும் அருளும் இனிமையும் கூறியபடியாம். இதனால், இறைவனது இயல்பு கூறப்பட்டது. 4 சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான் முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியாச் சிந்துரச் சேவடி யாணைச் சேவக னைவரக் கூவாய். பதப்பொருள் : சுந்தரம் - அழகிய, இன்பக்குயிலே - இனிமையைத் தருகின்ற குயிலே, சூழ் சுடர் - சூழ்ந்த கிரணங்களையுடைய, ஞாயிறு போல - சூரியனைப் போல, அந்தரத்தே நின்று இழிந்து - ஆகாயத்தினின்றும் இறங்கி, இங்கு-இம்மண்ணுலகிலுள்ள, அடியவர் - அடியார்களது, ஆசை அறுப்பான் - பற்றுகளை ஒழிப்பவனும், முந்தும் - உலகத்திற்கு முதலும், நடுவும் - இடையும், முடிவும் ஆகிய - இறுதியும் ஆகிய, மூவர் அறியா - பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவர் அறியவொண்ணாத, சிந்துரச் சேவடியானை - செஞ்சாந்து போன்ற சிவந்த திருவடியையுடையவனும், சேவகனை - வீரனுமாகிய பெருமானை, வரக் கூவாய் - வரும்படியாகக் கூவி அழைப்பாயாக. விளக்கம் : 'சுந்தரத்து' என்றதில் உள்ளது 'அத்து' சாரியை. அடிகளை ஆட்கொள்ள வந்த பொழுது இறைவனது திருமேனி பேரொளியுடையதாய் இருந்தமையால், 'சூழ்சுடர் ஞாயிறு போல, என்றார். 'முந்தும் நடுவும் முடிவும்' என்றது, படைத்துக் காத்து அழித்தலாகிய முத்தொழிலைக் குறித்தது. குணமூர்த்திகளாகிய பிரம விட்டுணுக்களோடு ஒருவனாய் நிற்கும் உருத்திரனும் குணமூர்த்தியேயாதலால், நிர்க்குணனாகிய சிவபிரான் அம்மூவராலும் அறியப்படாதவன் என்பார், 'மூவரறியாச் சிந்துரச் சேவடியான்' என்றார். இதனால், இறைவன் மும்மூர்த்திகளுக்கும் மேற்பட்டவன் என்பது கூறப்பட்டது. 5 இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன் நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு வானைக் கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய். பதப்பொருள் : குயிலே - குயிலே, கொம்பில் மிழற்றும் குயிலே - மரக்கிளையில் இருந்து கூவுகின்ற குயிலே, இன்பம் தருவன் - உனக்கு இன்பத்தைச் செய்வேன், ஏழ் உலகும் - ஏழு உலகத்தையும், முழுது ஆளி - முற்றும் ஆள்வோனும், அன்பன் - அன்பனும், அமுது
|