துதித்துத் தூநீராட்டி, தோத்திரங்கள் பல சொல்லித் தூபங்காட்டி' என்ற திருநாவுக்கரசர் வாக்கையுங்காண்க. 'துன்னிய பிணைமலர்' என்றது, நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மாலை வகை என்றபடியாம். 'பழக மாமலர் பறித்திண்டை கொண்டிறைஞ்சுவார்பாற் செறிந்த, குழகனார்' என்ற திருஞானசம்பந்தர் வாக்கினால் இண்டை, கண்ணி முதலிய மாலை வகையினைக் கொண்டு வழிபடுவார் என்று கொள்க. அன்பர்கள், 'கையுந் தலைமிசை புனை அஞ்சலியன, கண்ணும் பொழிமழை ஒழியாதே பெய்யுந் தகையன'வாகிய நிலையில் நின்று வழிபடுவார்களாதலின், 'தொழுகையர் அழுகையர் துவள்கையர்' என்றார். 'தொழுத கையினர் துளங்கிய மெய்யினர் உருகிய தொடர்போடும் அழுத கண்ணினர் அன்பினர்' என்ற உபதேச காண்டவடி இதனை விளக்குவது போல உள்ளது. இதனால், அதிகாலையில் அன்பர்கள் இறைவன் திருமுன்பு நிற்கும் நிலை கூறப்பட்டது. 4 பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந் தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பதப்பொருள் : சீதம் கொள் - குளிர்ச்சியைக் கொண்ட, வயல் - வயல் சூழ்ந்த, திருப்பெருந்துறை மன்னா - திருப்பெருந்துறைக்கு அரசனே, சிந்தனைக்கும் அரியாய் - நினைத்தற்கும் அருமையானவனே, எங்கள் முன் வந்து - எங்கள் எதிரில் எழுந்தருளி வந்து, ஏதங்கள் அறுத்து - குற்றங்களைப் போக்கி, எம்மை ஆண்டருள் புரியும் - எங்களை ஆட்கொண்டருளுகின்ற, எம்பெருமான் - எமது பெருமானே, நினை - உன்னை, பூதங்கள்தோறும் - எல்லாப் பூதங்களிலும், நின்றாய் எனின் அல்லால் - கலந்திருக்கிறாய் என்று பலரும் சொல்வதும் அல்லது, போக்கு இலன் வரவு இலன் என - போதலும் வருதலும் இல்லாதவன் என்று, புலவோர் - அறிவுடையோர், கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் - இசைப் பாடல்களைப் பாடுவதும் ஆனந்தக் கூத்தாடுவதும் அல்லது, உனைக் கண்டறிவாரை - உன்னை நேரே பார்த்தறிந்தவர்களை, கேட்டறியோம் - நாங்கள் கேட்டும் அறிந்ததில்லை; ஆயினும், யாங்கள் உன்னை நேரே காணும்படி, பள்ளி எழுந்தருளாய் - பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.
|