விளக்கம் : இறைவனை, எப்பொருளிலும் நிறைந்திருக்கின்றான் என்று பொதுவாக யாரும் கூறுகின்றனர் என்பார், 'பூதங்கள் தோறும் நின்றாயெனின் அல்லால்' என்றும், அவன் தன்மைகளைச் சிறப்பாக உணர்ந்த புலவர்கள் பாடுகின்றனர் என்பார், 'போக்கிலன் வரவிலன் எனப் புலவோர் பாடுதல் ஆடுதல் அல்லால்' என்றும் பிரித்துக் கூறினார். இவ்வாறு இசைப்பாடலினால் இசைப்பதும், அதன் பயனாகக் கூத்தாடுவதுமன்றி, நேரே கண்டவர் இல்லை என்பார், 'கேட்டறியோம் உனைக் கண்டறி வாரை' என்றார். எனினும், எங்கள் குற்றங்களைப் போக்கி ஆட்கொண்டமையி்ன் எங்கள் முன் எழுந்தருள வேண்டும் என்பார், 'பள்ளி எழுந்தருளாயே' என்றார். இதனால், இறைவன் காட்சிக்கு அரியவன் என்பது கூறப்பட்டது. 5 பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின் றார்அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பதப்பொருள் : அணங்கின் மணவாளா - உமையம்மைக்கு மணவாளனே, செப்பு உறு கமலங்கள் - கிண்ணம் போன்ற தாமரை மலர்கள், மலரும் - விரியப்பெற்ற, தண்வயல் சூழ் - குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த, திருப்பெருந்துறை உறை சிவபெருமானே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபிரானே, இப்பிறப்பு அறுத்து - இந்தப் பிறவியை நீக்கி, எம்மை ஆண்டு அருள் புரியும் - எங்களை ஆட்கொண்டு அருள் செய்கின்ற, எம் பெருமான் - எம் பெருமானே, பப்பு அற - மனவிரிவு ஒடுங்க, வீட்டிருந்து உணரும் - பற்றற்று இருந்து உணருகின்ற, நின் அடியார் - உன் அன்பர்கள், வந்து - உன்பால் அடைந்து, பந்தனை அறுத்தார் - பிறவித்தளையை அறுத்தவராய், அவர் பலரும் - அவர்கள் எல்லோரும், மைப்பு உறு கண்ணியர் - மை பொருந்திய கண்களையுடைய பெண்களும், மானுடத்து இயல்பின் - மனித இயல்பில் நின்றே, வணங்குகின்றார் - உன்னை வணங்கி நிற்கின்றார்கள்; அவர்களுக்கு அருள் புரிதற்பொருட்டு, பள்ளி எழுந்தருளாய் - பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக. விளக்கம் : பரப்பு அற என்பது 'பப்பற' என்றாயிற்று. மனம் பொருளின்மேல் செல்லாது ஒடுங்குதலை, 'பப்பற' என்றார்.
|