'வேகம் கெடுத்தாண்ட' என்று முன்னர் அகவலில் கூறினார். மனம் வெளிப் பொருளின்மேல் செல்லாது ஒடுங்குமாயின், அவற்றின் மேல் உண்டாகும் பற்று நீங்குமாதலின், 'வீட்டிருந்து' என்றார். பற்று நீங்கின் பிறவியறுமாதலின், 'பந்தனையறுத்தார்' என்றார். 'அவாஎன்ப எல்லா வுயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து' என்பது திருக்குறள். 'மைப்புறு கண்ணியரும்' என்ற உம்மை மறைந்து நின்றது. பந்தனை அறுத்த பெண்டிரும் உள்ளனர் என்பார், 'மைப்புறு கண்ணியரும்' என அவர்களைத் தனித்தெடுத்துக் கூறினார். பந்தனை அறுத்த இவர் அனைவரும் ஏனைய பொது மக்கள் போலவே அவர்களோடு கூடி நின்று வணங்குகின்றனர் என்பார், 'மானுடத்தியல்பின் வணங்குகிறார்' என்றார். வாசனாமலம் தாக்குமாதலின், ஞானிகளுக்கும் வணக்கம் உரித்து. இதனால், அதிகாலையில் முற்றுந்துறந்த ஞானியரும் வந்து வணங்குகின்றார் என்பது கூறப்பட்டது. 6 அதுபழச் சுவையென அமுதென அறிதற் கரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு இவனவன் எனவே எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு வுத்தர கோச மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. பதப்பொருள் : அது - பரம்பொருளானது, பழச்சுவை என - கனியின் சுவை போன்றது எனவும், அமுது என - அமுதத்தை ஒத்தது எனவும், அறிதற்கு அரிது என - அறிவதற்கு அருமையானது எனவும், எளிது என - அறிவதற்கு எளிமையானது எனவும் வாதிட்டு, அமரரும் அறியார் - தேவரும் உண்மையை அறியாத நிலையில் இருப்பர்; ஆனால், இது அவன் திருவுரு - இதுவே அப்பரமனது திருவடிவம், இவன் அவன் - திருவுருக்கொண்டுவந்த இவனே அப்பெருமான், எனவே - என்று நாங்கள் தெளிவாகச் சொல்லும்படியாகவே, இங்கெழுந்தருளி - இவ்வுலகத்தில் எழுந்தருளி வந்து, எங்களை ஆண்டுகொள்ளும் - எங்களை ஆட்கொண்டருளுகின்ற, மதுவளர் பொழில் - தேன் பெருகுகின்ற சோலை சூழ்ந்த, திருவுத்தர கோச மங்கை உள்ளாய் - திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளியிருப்பவனே, திருப்பெருந்துறை மன்னா - திருப்பெருந்துறைக்கரசனே, எம்பெருமான் - எமது பெருமானே, எம்மைப் பணி கொளும் ஆறு எது - எங்களை ஏவல் கொள்ளும் விதம் யாது, அது கேட்போம் -
|