417


அதனைக் கேட்டு அதன்படி நடப்போம், பள்ளி எழுந்தருளாய் - பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.

விளக்கம் : இறைவன் தேவர்கள் அனுபவத்துக்குத் அப்பாற்பட்டவன் என்பார். 'அது பழச்சுவையென அமுதென அறிதற்கரிதென எளிதென அமரரும் அறியார்' என்றார். எனினும், தம்முன் இறைவன் தோன்றியதேயன்றி அவனே என்று உணரும்படியும் எழுந்தருளினான் என்பார். 'இது அவன் திருவுரு இவனவன் எனவே எங்களை ஆண்டுகொண்டிங்கெழுந்தருளும்' என்றார், 'எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்' என்பதை, 'இங்கெழுந்தருளி எங்களை ஆண்டுகொள்ளும்' என மாற்றிப் பொருள் கூறுக. இறைவன் கட்டளைப்படி நடப்பதே அடியவர்கட்கு முறை ஆதலின், ' எது எமைப்பணிகொளும் ஆறு அது கேட்போம்' என்றார். தமக்கென விருப்பமும் பணிவும் இல்லை என்க.

இதனால், இறைவன் தேவர்கள் காட்சிக்கு அரியவன்; அடியவர் காட்சிக்கு எளியவன் என்பது கூறப்பட்டது.

7

முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.

பதப்பொருள் : ஆர் அமுதே - அருமையான அமுதமே, முந்திய முதல் - எப்பொருளுக்கும் முற்பட்ட முதலும், நடு இறுதியும் - நடுவும் முடிவும், ஆனாய் - ஆனவனே, மூவரும் அறிகிலர் - மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார், மற்று யாவர் அறிவார் - வேறு யாவர் அறியக்கூடியவர், பந்து அணை விரலியும் நீயும் - பந்தை ஏந்திய விரல்களையுடைய உமையம்மையும் நீயுமாக, நின் அடியார் - உன்னுடைய அடியார்களுடைய, பழங்குடில்தொறும் - பழைய சிறு வீடுதோறும், எழுந்தருளிய பரனே - எழுந்தருளின மேலானவனே, செந்தழல் புரை - சிவந்த நெருப்பை ஒத்த, திருமேனியும் காட்டி - வடிவத்தையுங்காட்டி, திருப்பெருந்துறையுறை - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற, கோயிலும் காட்டி - திருக்கோயிலையும் காட்டி, அந்தணன் ஆவதும் காட்டி - அழகிய தண்ணிய அருளாளனாதலையுங்காட்டி, வந்து ஆண்டாய் - வந்து ஆட்கொண்டவனே, பள்ளி எழுந்தருளாய் - பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.