425


"காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித்
தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி"

என்ற திருவம்மானையால் அறிக - ஆள்வார் இல்லாது நிலத்தில் மறைந்து கிடக்கும் பொருள், அறம் பொருள் இன்பம் என்பவற்றுள் ஒன்றிற்கும் பயன்படாது ஒழிதல் போல, யான் பயனின்றிக் கெடுதல் பொருந்துமோ என்பார், 'ஆள்வாரிலி மாடாவேனோ?' என்றார்.

இதனால், அடியார் கூட்டம் பயனைத் தரும் என்பது கூறப்பட்டது.

7

அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற் சிரியாரோ?

பதப்பொருள் : என்னைப் பொருளா - என்னை ஒரு பொருளாகக் கொண்டு, புகுந்து ஆண்ட - வலிய வந்து ஆட்கொண்ட, பொன்னே - பொன் போன்றவனே, பொன்னம்பலக் கூத்தா - பொற்சபையில் நடிக்கின்ற கூத்தனே, அருளாது ஒழிந்தால் - நீ அருள் செய்யாது ஒழிந்தனையாயின், அடியேனை - என்னை, இங்கு - இவ்வுலகில், அஞ்சேல் என்பார் - அஞ்சாதே என்பவர், ஆர் - யாவருளர்? மருள் ஆர் மனத்தோடு - மயக்கம் பொருந்திய மனத்துடன், உனைப் பிரிந்து வருந்துவேனை - உன்னைவிட்டு விலகித் துன்பப்படுகின்ற என்னை, வா என்று - வா என்று அழைத்து, உன் - உனது, தெருள் ஆர் - தெளிவு பொருந்திய, கூட்டம் - அடியார் கூட்டத்தை, காட்டாயேல் - காட்டாவிடில், செத்தே போனால் - யான் இறந்து போனால், சிரியாரோ - உலகத்தார் சிரிக்கமாட்டார்களோ?

விளக்கம் : பொருளாக என்பது, பொருளா என ஈறு தொக்கது. மருளாவது, உலகத்தைக் கண்டு மயங்குவது. தெருளாவது, இறைவன் திருவிளையாட்டைக் கண்டு தெளிவது. செத்துப் போதலாவது, பயனில்லாது கழிதல். இஃது, அடியார் கூட்டத்தைச் சேராமையால் உண்டாவது.

இதனால், அடியார் கூட்டத்தைச் சேராமையால் உண்டாகும் துன்பம் கூறப்பட்டது.

8

சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமந்
தரிப்பார் பொன்னம் பலத்தாடுந் தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி இனித்தான் நல்காயே.