மறையின் பொருளுமாய் - வேதத்தின் பொருளாகியும், என் மனத்திடை வந்து - என்னுடைய மனத்தின்கண் வந்து, மன்னிய - நிலைபெற்ற, மன்னே - தலைவனே, சிறை பெறா நீர்போல் - கட்டுப்படுத்தப்படாத வெள்ளம் போல, சிந்தைவாய் - என் சித்தத்தின்கண், பாயும் - பாய்கின்ற, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே, இறைவனே - ஆன்ம நாதனே, நீ என் உடலிடம் கொண்டாய், - நீ இப்பிறவியிலேயே என் உடம்பையே கோயிலாகக் கொண்டாய், இனி உன்னை என் இரக்கேன் - இனிமேல் உன்னை யான் வேண்டிக்கொள்வது என்ன இருக்கிறது? விளக்கம் : 'குறைவிலா நிறைவே' என்றதால், இறைவன் பரிபூரணமானவன் என்பதையும், 'கோதிலா அமுதே' என்றதால், தூய்மையானவன் என்பதையும் கூறினார். உள்ளம் உடலின்கண் உள்ளதாதலின், உள்ளத்தை இடமாகக்கொண்ட இறைவனை 'உடலிடங் கொண்டாய்' என்றார். "நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே" என்று திருநாவுக்கரசர் கூறியதையுங் காண்க. இறைவன் இவ்வாறு தங்கியிருப்பதைவிடப் பேறு என்ன உள்ளது? ஆதலின், 'இனியுன்னை யென்னிரக் கேனே' என்றார். 'புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி என்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்இவ் வையகத்தே' என்றுதானே வேண்டினார் திருநாவுக்கரசரும். இதனால், இறைவன் தன் அடியார்களுடைய உள்ளத்தையும் உடலையும் இடமாகக் கொள்கின்றான் என்பது கூறப்பட்டது. 5 இரந்திரந் துருக என்மனத் துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்தரஆ காயம் நீர்நிலம் தீகால் ஆயவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே. பதப்பொருள் : இரந்து இரந்து உருக - உன் திருவருளை இடைவிடாது வேண்டி உருகும் போது, என் மனத்துள்ளே - என்னுடைய மனத்தினுள்ளே, எழுகின்ற சோதியே - தோன்றுகின்ற ஒளியே, இமையோர் சிரந்தனில் பொலியும் - தேவர்கள் தலைமீது விளங்குகின்ற, கமலம் - தாமரை மலர் போன்ற, சேவடியாய் - திருவடியையுடையவனே, திருப்பெருந்துறையுறை சிவனே -
|