433


திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானே, நிரந்தர - எங்கும் நிறைந்த, ஆகாயம் - ஆகாசமும், நீர் - நீரும், நிலம் - பூமியும், தீ - நெருப்பும், கால் ஆய் - காற்றும் ஆகி, அவை அல்லையாய் - அவையல்லாதவனாய், ஆங்கே - அவ்வாறு, கரந்தது ஓர் உருவே - அருளாலன்றிக் காணப்படாத வடிவத்தையுடையவனே, இன்று - இப்பொழுது, உன்னை - உன்னை, கண்ணுறக் கண்டுகொண்டு - கண்ணாரக் கண்டு, களித்தனன் - பெருமகிழ்ச்சியடைந்தேன்.

விளக்கம் : மனத்தை ஒருமைப்படுத்தி இறைவனையே எண்ணினால், அங்கே சோதியாய்த் தோன்றுவான் என்பார், 'இரந்திரந்துருக என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே' என்றார். அகத்தே காணப்பட்ட சோதி புறத்தையும் காட்டிசயளித்தது என்பார், 'களித்தனன் கண்ணுறக் கண்டுகொண்டு' என்றார். கண்டுகொண்டு என்பதில், கொண்டு, துணை வினை.

இதனால், இறைவன், ஊன்றி உணர்வார் உள்ளத்தில் தோன்றும் சோதி வடிவானவன் என்பது கூறப்பட்டது.

6

இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்
தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றுநீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே.

பதப்பொருள் : நீ அலால் பிறிது இன்மை - உன்னையன்றி வேறு ஒரு பொருள் இல்லையாக, சென்று சென்று - பிற எல்லாப் பொருளையும் விட்டுவிட்டு, அணு அய்த் தேய்ந்து தேய்ந்து - அணுவளவாய்க் குறுகிக் குறுகி, ஒன்று ஆம் - கூட்டப்படுகின்ற, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற பெருமானே, ஒன்றும் நீயல்லை - காணப்படுகின்ற ஒரு பொருளும் நீ அல்லை, அன்றி ஒன்று இல்லை - உன்னையல்லாது பிற பொருளும் இல்லை, யார் உன்னை அறியகிற்பார் - யாவர் உன்னை அறிய வல்லவர்; (எனினும்) இன்று - இப்பொழுது, எனக்கு அருளி - எனக்கு அருள் புரிந்து, இருள் கடிந்து - அறியாமை இருளைப் போக்கி, உள்ளத்து எழுகின்ற - மனத்தே தோன்றுகின்ற, ஞாயிறே போன்று நின்ற - சூரியனே போல வெளி வந்து நின்ற, நின் தன்மை - உன்னுடைய இயல்பை, நினைப்பு அற நினைந்தேன் - தற்போதத்தினாலே எதிரிட்டு நினையாமல் அருள் வழியிலே நின்று நினைந்தேன்.