கட்டளையை அறவே நீக்கி, அன்பால் - அன்பினால், என்று - எப்போது, உன் அருள்வழி இருப்பேன் - அடியேன் உன்னுடைய திருவருள் நெறியிலே நிற்பேன், உனைப் பிரிவுறா அருளை - உன்னை விட்டு நீங்காத திருவருளை, காட்டி - எனக்கு அளித்து, நின் கழல் இணை காட்டி - உன் இரு திருவடிகளையும் கொடுத்து, காயமாயத்தைக் கழித்து - உடம்பாகிய பொய்யினைப் போக்கி, அருள் செய்யாய் - திருவருள் புரிவாயாக. விளக்கம் : நாட்டுத்தேவர், சிறு தெய்வங்கள்; அந்தணர் என்பாரும் உளர். சேடு - திரட்சி. சேட்டைத் தேவர் - தேவர் கூட்டம். சேட்டைத் தேவர்தம் தேவர் - இந்திரன் முதலியோர். ஆட்டுத் தேவர், பிரமனாதியர். வினைவழிச் செல்லாது அருள் வழி நடத்தல் அருள் வழியிருத்தலாம். தோன்றி மறையக்கூடியது உடம்பாதலின், காயத்தை மாயம் என்றார். இதனால், இறைவனது தலைமை கூறப்பட்டது. 5 அறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக் கார்கி லேன்திரு வருள்வகை யறியேன் பொறுக்கி லேன்உடல் போக்கிடங் காணேன் போற்றி போற்றியென் போர்விடைப் பாகா இறக்கி லேன்உனைப் பிரிந்தினி திருக்க என்செய் கேன்இது செய்கஎன் றருளாய் சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்சூழ் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே. பதப்பொருள் : என் - என்னுடைய, போர் விடைப் பாகா - போரில் வல்ல விடையை ஊர்பவனே, சிறைக்கணே - வரம்பினுள்ளே, புனல் - நீர், நிலவிய - நிலை பெற்ற, வயல் சூழ் - வயல் சூழ்ந்த, திருப்பெருந்துறை மேவிய சிவனே - திருப்பெருந்துறையில் பொருந்திய சிவபெருமானே, போற்றி போற்றி - வணக்கம் வணக்கம், உடல் துணிபட - உடம்பு துண்டாகும்படி, அறுக்கிலேன் - வெட்ட மாட்டேன், தீப்புக்கு ஆர்கிலேன் - தீயின்கண் புகுந்து அமைதி பெற மாட்டேன், திருவருள் வகை அறியேன் - திருவருளின் முறையையும் அறிய மாட்டேன், உடல் பொறுக்கிலேன் - உடற்சுமையையும் தாங்க மாட்டேன், போக்கிடம் காணேன் - இதனை விட்டு நீங்கி அடையும் இடத்தையும் காணேன், உனைப் பிரிந்து இறக்கிலேன் - உன்னை விட்டு நீங்கி உயிரையும் விடவில்லை, இனிது இருக்க - இன்பமாய் இருக்க, என் செய்கேன் - யான் என்ன செய்ய வேண்டும்; இது செய்க என்று அருளாய் - இதனைச் செய்க என்று அருள் புரிவாயாக. விளக்கம் : இறைவன் பிரிவு எத்தகைய துன்பமுடையது என்பதை உணர்த்த, 'என் செய்கேன்' என்று ஆற்றாது மொழிந்தார். அப்
|