449


சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறமறந்திங்
கிருள்புரி யாக்கையி லேகிடந் தெய்த்தனன் மைத்தடங்கண்
வெருள்புரி மான்அன்ன நோக்கிதன் பங்கவிண் ணோர்பெருமான்
அருள்புரி யாய்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.

பதப்பொருள் : மை - அஞ்சனம் எழுதிய, தடம் - விசாலமான, கண் - கண்களையும், வெருள் புரி மான் அன்ன - வெருளுகின்ற மானினது நோக்கம் போன்ற, நோக்கி தன் - நோக்கத்தையுடைய உமையம்மையின், பங்க - பாகத்தையுடையவனே, விண்ணோர் பெருமான் - தேவர் பெருமானே, உடையாய் - உடையவனே, சுருள் புரி கூழையர் - சுருளாகக் கட்டப்பட்ட கூந்தலையுடைய மாதரது, சூழலில் பட்டு - சூழ்ச்சியில் அகப்பட்டு, உன் திறம் மறந்து - உன்னுடைய கருணைத்திறத்தை மறந்து, இங்கு - இவ்விடத்து, இருள் புரி - அறியாமையை விளைவிக்கின்ற, யாக்கையிலே கிடந்து - உடலிலே தங்கி, எய்த்தனன் - இளைத்தேன், அடியேன் - யான், உன் அடைக்கலம் - உனக்கு அடைக்கலம், அருள் புரியாய் - திருவருள் புரிவாயாக.

விளக்கம் : உடலைப் பெற்றது உன் கருணையை நினைந்து உருகுவதற்காக; ஆனால், "வந்த வேலையை விட்டுப் பந்தற்காலைப் பிடித்தது போல" மாதர் மையலில் பட்டு வருந்துகின்றேன என்பார், 'இருள் புரி யாக்கையிலே கிடந்தெய்த்தனன்' என்றார். கருணையைப் பெறத் துணை செய்யாது, துன்பினைப் பெறத் துணை செய்தலால் உடலை, 'இருள்புரி யாக்கை' என்றார்.

இதனால், இறைவன் கருணையே மையலை நீக்க வல்லது என்பது கூறப்பட்டது.

5

மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழியெப் போதுவந் தெந்தாள் வணங்குவன் வல்வினையேன்
ஆழியப் பாவுடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.

பதப்பொருள் : ஆழி அப்பா - கருணைக்கடலாகிய அப்பனே, உடையாய் - உடையவனே, மாழை - மாவடுவின் பிளவையொத்த, மை பாவிய - அஞ்சனம் தீட்டப்பெற்ற, கண்ணியர் - கண்களையுடைய மாதராகிய, வல் மத்து இட - வலிய மத்தை இடுதலால், உடைந்து - சிதறி, தாழியைப் பாவு - பானையில் பரவிய, தயிர் போல் - தயிரைப் போல, தளர்ந்தேன் - மனம் உடைந்து தளர்ச்சியடைந்தேன், தடமலர்த்தாள் - பெருமை பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிகளை, வல்வினையேன் - வலிய வினையையுடைய யான், எப்போது வந்து - எப்பொழுது வந்து, எந்நாள்