இதனால், உலகுக்கு அந்தத்தைச் செய்கிறவன் இறைவன் என்பது கூறப்பட்டது. 11 கானார் புலித்தோல் உடைத்தலைஊண் காடுபதி ஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடீ ஆனாலுங் கேளாய் அயனுந் திருமாலும் வானாடர் கோவும் வழியடியார் சாழலோ. பதப்பொருள் : ஏடீ - தோழியே, உடை - அவனுக்கு ஆடை, கான் ஆர் - காட்டில் வாழ்கின்ற, புலித்தோல் - புலியினது தோல், ஊண் - உண்ணல், தலை - மண்டை ஓட்டில், பதி - உறைவிடம், காடு - மயானம், ஆனால் - இங்ஙனமாகுமானால், அவனுக்கு - அந்தச் சிவபெருமானுக்கு, இங்கு - இவ்வுலகத்தில், ஆட்படுவார் ஆர் - அடிமைப்படுவார் யார்? ஆனாலும் - அவ்வாறாயினும், கேளாய் - அதுபற்றிச் சொல்லுகின்றேன் கேள், அயனும் - பிரமனும், திருமாலும் - விட்டுணுவும், வான்நாடர்கோவும் - விண்ணுலகத்தார்க்கு அரசனாகிய இந்திரனும், வழி அடியார் - அவனுக்குப் பரம்பரை அடியவர்களாய் உள்ளார்கள். விளக்கம் : தாருகாவனத்து முனிவர்களால் ஏவப்பட்ட புலியைக் கொன்று, அதன் தோலை உலித்து, ஆடையாக அணிந்துள்ளமையின், ‘கானார் புலித்தோல் உடை’ என்றார். ‘கானார்’ என்பது சாதி அடை. ‘தலைக்கண்’ என ஏழனுருபு இறுதியில் தொக்கது. இதனால், இறைவன் தேவதேவன் என்பது கூறப்பட்டது. 12 மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங் கலைநவின்ற பொருள்களெல்லாம் கலங்கிடுங்காண் சாழலோ. பதப்பொருள் : ஏடீ - தோழியே, மலையரையன் - மலையரசனது, பொன்பாவை - பொன்னாற்செய்யப்பட்ட பாவை போன்ற, வாள் நுதலாள் - ஒளி பொருந்திய நெற்றியை யுடையவளாகிய, பெண் திருவை - பெண் செல்வத்தை, உலகு அறிய - உலகோர் அறியும்படி, தீ வேட்டான் என்னும் அது - அக்கினி சாட்சியாக மணம் புரிந்தான் என்பது, என் - என்ன? உலகு அறிய - உலகோர் அறியுமாறு, தீ வேளாது ஒழிந்தனன் ஏல் - அக்கினி சாட்சியாக அவன் மணம் புரியாது போனால், உலகு அனைத்தும் - உலகில் உள்ள உயிர்கள் எல்லாம், கலை நவின்ற - நூலினாற்சொல்லப்பட்ட, பொருள்கள் எல்லாம் - கருத்துகள் முழுவதிலும், கலங்கிடும் - கலக்கத்தை அடையும்.
|