என்னை யாக்குவித்து’ என்று அடிகள் இறைவனது திருவிளையாடலை வியந்து கண்ட பத்தில் கூறுகிறார். ஒத்துச் செல்லுதலாவது, தம்முனைப்பின்றித் திருவருள் வழி நடப்பது. செத்துப் போதலாவது, திருவருளையடையாது மீண்டும் பிறத்தற்கு ஏதுவாக மடிதலாம். இதனால், இறைவன் திருவருள் பெற்றவர் உலகத்தார்க்குப் பித்தர் போலத் தோன்றுவர் என்பது கூறுப்பட்டது. 4 பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன் குரவு வார்குழ லார்திறத் தேநின்று குடிகெடு கின்றேனை இரவு நின்றெரி யாடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. பதப்பொருள் : பரவுவார் - இறைவனைத் துதிப்பவராகிய, அவர் பாடு சென்று - அவ்வடியார் பக்கத்தே சென்று, அணைகிலேன் - அடைய மாட்டாமலும், பல் மலர் பறித்து ஏத்தேன் - பல வகையான பூக்களை இறைவன்மீது தூவித் துதியாமலும், குரவு - குரா மலரையணிந்த, வார் - நீண்ட, குழலார் திறத்தே நின்று - கூந்தலையுடையவராகிய மாதரது வசத்தில் நின்று, குடி கெடுகின்றேனை - குலத்தோடு அழிகின்ற என்னை, இரவு நின்று - நள்ளிரவில் நின்று, எரியாடிய - தீயாடிய, எம் இறை - எம் நாதனும், எரிசடை மிளிர்கின்ற - நெருப்புப் போன்ற சடையில் விளங்குகின்ற, அரவன் - பாம்பை யுடையவனுமாகிய சிவபெருமான், ஆண்டு - ஆட்கொண்டருளி, தன் அடியரில் கூட்டிய - தன்னுடைய அடியார்களோடு சேர்த்த, அதிசயம் கண்டாம் - அதிசயத்தைப் பார்த்தோம். விளக்கம் : பரவுவாரோடு சேர்த்தலும், பன்மலர் பறித்து ஏத்தலும் இறைவனை அடைதற்குரிய நன்னெறியாம். வார்குழலார் திறத்தே சேர்வது தீ நெறியாம். நன்னெறி தீநெறி இரண்டும் கூறியபடி. இரவு - ஒளிப்பொருள் களும் அடங்கிய பேரூழிக்காலம். எரி - ஊழித்தீ. எல்லாப் பொருளும் அழிந்த காலத்தும், இறைவன் அழியாது நின்று மீளப் படைக்கிறான் என்பார், ‘இரவு நின்றெரியாடிய எம்மிறை’ என்றார். இதனால், இறைவன் திருவருளைப் பெறுதற்கு, அவனைப் பரவுதலும், பன்மலர் தூவி ஏத்துதலும் வேண்டும் என்பது கூறப்பட்டது. 5 எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடும் நல்வினை நயவாதே மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற் கொருப்படு கின்றேனை அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. பதப்பொருள் : என் ஏழைமையதனாலே - என்னுடைய அறியாமையால், திருநாமம் - தன்னுடைய திருநாமமாகிய,
|