ஒளியைத் திருமேனியின் ஒளிக்கும், மாமணியாகிய நீலத்தின் ஒளியை நீலகண்டத்தினது ஒளிக்கும் உவமையாகக்கொள்க. இதனால், நிலையில்லாத உடம்பை நிலையெனக் கருதும் மயக்கம் இறைவன் திருவருளாலே நீங்கும் என்பது கூறப்பட்டது. 7 நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத் தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. பதப்பொருள் : தூக்கி முன் செய்த பொய் அற - பிறவிக் கடலினின்று எடுத்து முன் செய்த பயனற்ற செயல்கள் நீங்கும்படி, துகள் அறுத்து - குற்றத்தை அழித்து, எழுதரு - எழுகின்ற, சுடர் - ஒளியையுடைய, சோதி - ஒளிப்பிழம்பாகிய சிவபெருமான், எனை - என்னை, முன் - முன்னே, தன்னொடு நிலாவகை - தன்னோடு சேர்ந்திராவண்ணம், நீக்கி - விலக்கி, குரம்பையில் புகப்பெய்து - உடம்பாகிய சிறு குடிசையில் புகுத்தி, நோக்கி - அருட் கண்ணாற்பார்த்து, நுண்ணிய - நுட்பமாகிய, நொடியன - நொடியளவில் சொல்லக்கூடியவாகிய, சொல் செய்து - உபதேசத்தையருளி, நுகம் இன்றி - கலப்பையில்லாமல், விளாக்கைத்து - உழுதலைச் செய்து, ஆக்கி - பக்குவப்படுத்தி, ஆண்டு - ஆட்கொண்டருளி, தன் அடியரில் கூட்டிய - தன்னுடைய அடியார்களோடு சேர்த்த, அதிசயம் கண்டாம் - அதிசயத்தைப் பார்த்தோம். விளக்கம் : முன் என்றது, கேவலத்தில் அறியாமையில் மூழ்கிக் கிடந்ததை. கேவலத்தில் சூக்கும தேகத்தைக் கூட்டுபவன் இறைவனாதலின், ‘குரம்பையிற் புகப்பெய்து’ என்றார். நுண்ணிய சொல்லாவது பிரணவம். நுகம் - நுகத்தடி; இங்குக் கலப்பைக் காயிற்று; சினையாகுபெயர். விளா - உழவில் வரும் சுற்று. விளாக்கைத்தல் - அவ்வாறு உழுதலைச் செய்தல். ‘விளா அடித்துப் போடப்பட்டது’ என்ற உழவர் சொல்லும் நினைவு கூரத்தக்கது. அடிகள் குலாப்பத்தில் ‘பாழ்செய் விளாவி’ எனக் கூறியதும் இக்கருத்தை வலியுறுத்துவதாம். நுகமின்றி விளாக்கைத்தலாவது, இறைவன் சாதனமின்றித் தம்மைப் பக்குவப்படுத்தியதாம். தூக்குதலாவது, உலகப் பந்தத்தினின்றும் எடுத்தல் என்பதாம். முன் செய்த பொய்யாவது, சஞ்சித வினை. துகளறுத்தலாவது, காமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றத்தையும் போக்கி என்பதாம். இதனால், இறைவன் பக்குவம் வாய்ந்தவர்களைச் சாதனம் இன்றியும் ஆட்கொள்வான் என்பது கூறப்பட்டது. 8
|