469


இதனால், இறைவனது பெருமை கூறப்பட்டது.

1

ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்தைம் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தை செய்து சிவன்எம் பெருமான் என்றேத்தி
ஊற்று மணம்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றி நிற்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.

பதப்பொருள் : அடியேன் - அடியேன், அவனிதலத்து - பூதலத்திலே, ஐம்புலன் ஆய சேற்றில் அழுந்தா - ஐம்புலன்களாகிற சேற்றில் அழுந்தி, ஆற்ற கில்லேன் - பொறுக்கமாட்டாதவனாய் உள்ளேன், என் பொல்லா மணியைப் புணர்ந்து - எனது செதுக்கப்படாத மாணிக்கம் போன்ற இறைவனைச் சேர்ந்து, சிந்தை செய்து - அவனையே நினைத்து, அரசே - அரசனே, சிவன் - சிவனே, எம்பெருமான் - எம்பெருமானே, என்று ஏத்தி - என்று துதித்து, ஊற்று மணல் போல் - ஊற்றினையுடைய மணலைப் போன்று, நெக்கு நெக்கு - நெகிழ்ந்து நெகிழ்ந்து, உள்ளே உருகி - மனமானது உருகி, ஓலமிட்டு - முறையிட்டு, போற்றி நிற்பது - வணங்கி நிற்பது, என்று கொல்லோ - எந்நாளோ!

விளக்கம் : சேற்றில் அகப்பட்டால் வெளியேறுவது கடினமாதல்போல, ஐம்புல ஆசையில் அகப்பட்டால் வெளியேறுவது கடினமாதலின், ஐம்புலனைச் ‘சேறு’ என்றார். ‘உலக ஆசையை விடுவதற்குச் சித்தத்தைச் சிவன்பாலே வைக்க வேண்டும்’ என்பார், ‘சிந்தை செய்து’ என்றும், ‘வாயினாலும் நன்கு துதிக்க வேண்டும்’ என்பார், ‘சிவனெம் பெருமான் என்று ஏத்தி’ என்றும் கூறி, இவ்வுபாயங்களைத் தெரிவித்தார். ஊற்றினை யுடைய மணல் நெகிழ்ந்து இருக்கும். அதைப் போல, மனமும் நெகிழ்ச்சியுடையதாக இருக்க வேண்டும் என்பார், ‘ஊற்று மணல் போல் நெக்கு நெக்குள்ளே உருகி’ என்றார்.

இதனால், இறைவன் திருவடியை மனமுருகி வணங்க வேண்டும் என்பது கூறப்பட்டது.

2

நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டு கொண்ட என்ஆ ரமுதை அள்ளூ றுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட் டலறி விரையார் மலர்தூவிப்
பூண்டு கிடப்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.

பதப்பொருள் : நீண்ட மாலும் - நெடிய திருமாலும், அயனும் - பிரமனும், வெருவ - அஞ்சும்படி, நீண்ட - ஓங்கி நின்ற, நெருப்பை - அழற்பிழம்பானவனும், விருப்பு இலேனை - தன்னிடத்து ஆசையில்லாத என்னை, ஆண்டுகொண்ட - ஆட்கொண்டருளின, என் ஆர் அமுதை - என்னுடைய அருமையான அமுதம் போன்ற