470


வனுமாகிய இறைவனை, அள்ளூறு உள்ளத்து - மிகுதியாக உருகுகின்ற மனத்தினையுடைய, அடியார் முன் - அடியவர்கள் முன்னிலையில், வேண்டுந்தனையும் - வேண்டுமளவும், வாய்விட்டு அலறி - வாய் திறந்து அரற்றி, விரை ஆர் மலர் தூவி - மணம் பொருந்திய மலர்களை அருச்சித்து, என் பொல்லா மணியை - என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தை, புணர்ந்து - சேர்ந்து, பூண்டு கிடப்பது - திருவடியைச் சிரமேற்கொண்டு கிடப்பது, என்று கொல்லோ - எந்நாளோ!

விளக்கம் : மால் நீண்டது திருவிக்கிரமாவதாரத்தில். இறைவன் நெருப்பாய் நீண்டது திருவண்ணாமலையில். நீண்ட மாலைக்காட்டிலும் நீண்டான் சிவபெருமான் என்ற நயத்தினைக் காண்க. மலரைத் தூவிப் பூண வேண்டும் என்றதால், திருவடி என்பது கொள்ளப்பட்டது. சுந்தரருக்கு இறைவன் சித்தவட மடத்தில் தானே திருவடி சூட்டியதை நினைவுகூர்க.

இதனால், இறைவன் திருவடியை மலர் தூவி வழிபட வேண்டும் என்பது கூறப்பட்டது.

3

அல்லிக் கமலத் தயனும் மாலும்
அல்லா தவரும் அமரர் கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச்
சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை
நிறைஇன் னமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்று கொல்லோ
என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.

பதப்பொருள் : அல்லிக் கமலத்து - அக இதழ்களையுடைய தாமரை மலரிலுள்ள, அயனும் - பிரமனும், மாலும் - திருமாலும், அமரர் கோனும் - தேவர் தலைவனாகிய இந்திரனும், அல்லாதவரும் - மற்றைத் தேவரும், சொல்லிப் பரவும் நாமத்தானை - சொல்லித் துதிக்கின்ற திருநாமத்தையுடைய வனும், சொல்லும் பொருளும் இறந்த சுடரை - சொல்லுலகத்தையும் பொருளுலகத்தையும் கடந்த ஒளியானவனும், நெல்லிக்கனியை - நெல்லிக் கனியைப் போன்றவனும், தேனை - தேனையும், பாலை - பாலையும், நிறை இன் அமுதை - நிறைந்த இனிய அமுதத்தையும், அமுதின் சுவையை - அமுதத்தின் சுவையையும், என் பொல்லா மணியை - என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தையும் போன்றவனும் ஆகிய இறைவனை, புணர்ந்து - சேர்ந்து, புல்லிப் புணர்வது - தழுவிச் சேர்வது, என்று கொல்லோ - எந்நாளோ!