472


பரிந்து வந்து பரமா னந்தம் பண்டே அடியேற் கருள்செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்
புரிந்து நிற்ப தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.

பதப்பொருள் : பரிந்து வந்து - விரும்பி வந்து, பண்டே - முன்னமே, அடியேற்கு - அடியேனுக்கு, பரம ஆனந்தம் அருள் செய்ய - மேலான இன்பத்தை அருள் செய்யவும், பிரிந்து போந்து - பிரிந்து வந்து, பெருமாநிலத்தில் - பெரிய நிலவுலகத்தில், அருமால் உற்றேன் - பெரிய மயக்கத்தை அடைந்தேன், என்று என்று - பலகால் எண்ணி, சொரிந்த கண் நீர் சொரிய - நீரைப் பொழியும் கண்கள் நீரைப் பொழிந்துகொண்டேயிருக்க, உள்நீர் உரோமம் சிலிர்ப்ப - உள்ளன்பினால் மயிர்க்கூச்செறிய, உகந்து - அன்பாய் - மகிழ்ச்சியுற்று அன்போடு, என் பொல்லா மணியை - என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கத்தை, புணர்ந்து - சேர்ந்து, புரிந்து நிற்பது - விரும்பி நிற்பது, என்று கொல்லோ - எந்நாளோ!

விளக்கம் : இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பொழுது அவனுடன் செல்லாமல், இவ்வுலகில் தாம் நின்றுவிட்ட நிலையை எண்ணி வருந்தி, ‘பிரிந்து போந்து பெருமாநிலத்தில் அருமாலுற்றேன்’ என்றார். அன்பினால் உண்டாகும் ஆனந்தக் கண்ணீர் இடையறாது ஒழுக வேண்டும் என்பார், ‘சொரிந்த கண்ணீர் சொரிய’ என்றார். உள்நீர் - உள்ளேயுள்ள நீர்மை, அன்பு. ‘உள் நீர்மையால்’ என்று, மூன்றாம் வேற்றுமையுருபை விரித்துப் பொருள் கொள்க.

இதனால், திருவருள் வழி நிற்க வேண்டும் என்பது கூறப்பட்டது.

6

நினையப் பிறருக் கரிய நெருப்பை
நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை யில்லாத் தனியை
நோக்கித் தழைத்துத் தழுத்த கண்டங்
கனையங் கண்ணீர் அருவி பாயக்
கையுங் கூப்பிக் கடிமலராற்
புனையப் பெறுவ தென்று கொல்லோ
என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.

பதப்பொருள் : பிறருக்கு - அன்பரல்லாத பிறருக்கு, நினைய அரிய - நினைத்தற்கு அருமையான, நெருப்பை நீரை காலை நிலனை விசும்பை - நெருப்பு நீர் காற்று நிலம் விண்ணாகியவனும், தனை ஒப்பாரை இல்லா தனியை - தன்னை ஒப்பவர் இல்லாத தனிப் பொருளுமாகிய இறைவனை, நோக்கி - பார்த்து, என் பொல்லா மணியை - என்னுடைய செதுக்கப்படாத மாணிக்கம்