479


உலகத்தையும் கடந்து, அன்று - அக்காலத்தில், இருவர் காணும் நாள் - திருமால் பிரமனாகிய இருவரும் காணப்புகுந்த நாளில், ஆதி ஈறு இன்மை வல்லையாய் - முதலும் முடிவும் இன்றித் தோன்ற வல்லவனாய், வளர்ந்தாய் - வளர்ந்தவனே, நான் மற்றுப் பற்று இலேன் - நான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன், வாழ்கிலேன் - வாழ மாட்டேன், வருக என்று - வருவாய் என்று அழைத்து, அருள் புரியாய் - அருள் புரிவாயாக!

விளக்கம் : ‘எனக்கு இரங்குபவர்கள் உன்னையன்றி வேறு ஒருவரும் இல்லை; ஆதலின், அருள் செய்ய வேண்டும்’ என்பார். ‘பற்று நான் மற்றிலேன்’ என்றும், முப்புரத்தை எரித்தவனாதலின், மும்மலக் கோட்டை யாகிய இவ்வுடம்பினை அழிக்க வேண்டும் என்பார், ‘புரமெரித் தானே வருக என்றருள் புரியாயே’ என்றும் கூறினார். மும்மலங்களும் மூன்றசுரர்கள் என்பதாம்.

இதனால், இறைவனே உடம்பாகிய கூட்டினை அழித்து அருள வல்லவன் என்பது கூறப்பட்டது.

4

பண்ணினேர் மொழியாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண்
என்றிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன் றருள்புரி யாயே.

பதப்பொருள் : பண்ணின் - பண்ணினை, நேர் மொழியாள் - ஒத்த மொழியாளாகிய உமையம்மையின், பங்க - பங்கனே, திண்ணமே ஆண்டாய் - என்னை உண்மையாகவே ஆட்கொண்டருளியவனே, சிவபுரத்து அரசே - சிவலோகநாதனே, திருப்பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, நீ அல்லால் - உன்னையன்றி, நான் மற்றுப் பற்று இலேன் - நான் வேறு ஒரு பற்றுக்கோடு இல்லேன், எண்ணம் - எனது நினைப்பு, உடல் - மெய், வாய் - வாய், மூக்கொடு - நாசியோடு, செவிகண் - செவிகளும் கண்களும், என்று இவை - என்று சொல்லப்பட்ட இவற்றை, நின்கணே வைத்து - உன்னிடத்தே வைத்ததனால், மண்ணின்மேல் - மண்ணுலகத்தின்கண், அடியேன் வாழ்கிலேன் - நான் வாழ மாட்டேன், வருக என்று - வருவாய் என்று அழைத்து, அருள் புரியாய் - அருள் செய்வாயாக!

விளக்கம் : ‘திண்ணமே ஆண்டாய்’ என்றது, திருப்பெருந்துறையில் குருவாய் நேரில் தோன்றி ஆட்கொண்டமையை நினைவுபடுத்தியதாம். ஆளப்பட்டமையால் தம்முடைய கருவி கரணங்கள் ஆண்டவனுடையன வாதலின், ‘எணணமே உடல் வாய்