மூக்கொடு செவிகண் என்றிவை நின்கணே வைத்து’ என்றார். கருவி கரணங்களை ஆண்டவனிடம் ஒப்படைத்த பின்னர்த் தமக்கு உலகில் வாழ உரிமையில்லை என்பார், ‘மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்’ என்றார். இதனால், மனமும் ஐம்பொறிகளும் இறைவனுடையன என்பது கூறப்பட்டது. 5 பஞ்சின்மெல் லடியாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அறித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே. பதப்பொருள் : பஞ்சின் - பஞ்சினம், மெல் அடியாள் - மென்மையான பாதங்களையுடைய உமையம்மையின், பங்க - பங்கனே, நீ அல்லால் - உன்னையன்றி, நான் - யான், மற்றுப் பற்று இலேன் - வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன், செஞ்செவே ஆண்டாய் - மிகவும் செம்மை யாகவே ஆண்டருளினை, சிவபுரத்து அரசே - சிவலோகநாதனே, திருப் பெருந்துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, நாயேன் அஞ்சினேன் - நாய் போன்ற யான் பயப்படு கின்றேன், நீ ஆண்டு அளித்த அருளினை - நீ ஆட்கொண்டு வழங்கிய கருணையை, மருளினால் மறந்த - மயக்கத்தினால் மறந்த, வஞ்சனேன் - வஞ்சகனாகிய யான், இங்கு வாழ்கிலேன் - இவ்வுலகில் வாழ மாட்டேன், வருக என்று - வருவாய் என்றழைத்து, அருள் புரியாய் - அருள் புரிவாயாக! விளக்கம் : ‘நீ ஆட்கொண்டதில் குறைவு ஒன்றும் இல்லை’ என்பார், ‘செஞ்செவே ஆண்டாய்’ என்றார். இறைவனது திருவருளை மறத்தல் மயக்கத்தால் ஆதலின், ‘அருளினை மருளினால் மறந்த’ என்றார். நன்மை செய்ததை மறத்தல் வஞ்சகரது செயலாதலின், ‘வஞ்சனேன்’ என்று தம்மை இழித்துக் கூறிக்கொண்டார். இதனால், இறைவனது அருளை மறத்தலாகாது என்பது கூறப்பட்டது. 6
|