பருதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுயர் கோலச் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துயான் வாழுமா றறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே. பதப்பொருள் : பருதி வாழ் ஒளியாய் - சூரிய மண்டலத்தில் எழுந்தருளியிருக்கும் ஒளி வடிவானவனே, திரு உயர் - செல்வத்தாற்சிறந்த, கோலம் - அழகிய, சிவபுரத்து அரசே - சிவலோகநாதனே, திருப்பெருந் துறையுறை சிவனே - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே, பாதமே அல்லால் - உன் திருவடியையன்றி, நான் மற்றுப் பற்று இலேன் - யான் வேறு ஒரு பற்றுக்கோடும் இல்லேன்; யான் - நான், கருணையே நோக்கி - உன் திருவருளையே கருதி, உளம் கசிந்து உருகி - உள்ளங்கனிந்து உருகி, கலந்து - உன்னோடு கலந்து, வாழும் ஆறு அறியா - வாழ்கின்ற வகையினையறியாத, மருளனேன் - மயக்க உணர்வினையுடையேன், உலகில் வாழ்கிலேன் - இவ்வுலகத்தில் வாழ மாட்டேன், வருக என்று - ஆதலால் வருவாய் என்றழைத்து, அருள் புரியாய் - அருள் புரிவாயாக! விளக்கம் : சூரிய மண்டலத்தில் சிவபெருமான் எழுந்தருளி யிருக்கின்றார் என்று ஆகமங்கள் கூறுதலின், ‘பருதிவாழ் ஒளியாய்’ என்றார். மருளாவது, இறைவனது திருவருளை மறந்து வாழ்வது என்பார், ‘கருணையே நோக்கி........வாழுமாறறியா மருளனேன்’ என்றார் மருளைப் போக்கி, விளக்கத்தைத் தந்தருள வேண்டும் என்பதாம். இதனால், இறைவன் திருவருள் வழி நடக்க வேண்டும் என்பது கூறப்பட்டது. 7 பந்தணை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே அந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே ஆரமு தேஅடி யேனை வந்துய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே. பதப்பொருள் : பந்து அணை விரலாள் - பந்து பொருந்திய விரலினை யுடைய உமையம்மையின், பங்க - பங்கனே, நீ அல்லால் - நீயன்றி, நான் - யான், மற்றுப் பற்று இலேன் - வேறு ஒரு பற்றுக்கோடும் இலேன்; செந்தழல் போல்வாய் - செம்மையான
|