507


அடியார் சிலர்உன் அருள்பெற்றார் ஆர்வங் கூர யான்அவமே
முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன்
கடியே னுடைய கடுவினையைக் களைந்துன் கருணைக் கடல்பொங்க
உடையாய் அடியேன் உள்ளத்தே ஓவா துருக அருளாயே.

பதப்பொருள் : உடையாய் - உடையவனே, அடியார் சிலர் - உன் அடியார்களுள் சிலர், ஆர்வம் கூர - உன்னிடத்தில் அன்பு மிக, உன் அருள் பெற்றார் - உன்னுடைய அருளைப் பெற்றார்கள்; அடியேன் யான் - அடியவனாகிய நானோ, அவமே - வீணே, முடை ஆர் பிணத்தின் - முடை நாற்றமுடைய பிணத்தைப் போன்று, முடிவின்றி - அழிவின்றி, முனிவால் - வெறுப்பினால், மூக்கின்றேன் - வயது முதிர்கின்றேன்; கடியேனுடைய - இளகாத மனமுடையேனுடைய, கடுவினையை - கொடுமையான வினைகளை, களைந்து - நீக்கி, அடியேன் உள்ளத்து - அடியேனுடைய உள்ளத்தில், உன் கருணைக்கடல் பொங்க - உன்னுடைய கருணையாகிய கடல் பொங்கும் வண்ணம், ஓவாது உருக - இடைவிடாது உருகும்படி, அருளாய் - அருள் புரிவாயாக.

விளக்கம் : 'பிணத்தின் மூக்கின்றேன்' என்றது, பிணத்தைப் போன்று பயனின்றி அழிகின்றேன் என்பதாம். அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கையைப் பயனற்ற வாழ்க்கை என்றார். முனிவு, முடை நாற்றம் பொருந்திய உடம்பில் வாழ்வதால் உண்டாவது. கருணைக்கடல் பொங்குவதற்கு உள்ளம் உருக வேண்டும் என்பதாம்.

இதனால், இறைவன் கருணைக்கடலாய் இருப்பவன் என்பது கூறப்பட்டது.

2

அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த
இருளா ராக்கை இதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன் வருமால் என்றிங் கெனைக்கண்டார்
வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டுமே.

பதப்பொருள் : எம்மானே - எம்பெருமானே, உடையாய் - உடையவனே, அருள் - திருவருளாகிய, ஆர் அமுதப் பெருங்கடல்வாய் - அரிய அமுதம் போன்ற பெரிய கடலின்கண், அடியார் எல்லாம் - உன் அடியார்களெல்லாம், புக்கு அழுந்த - புகுந்து திளைத்திருக்க, நான், இருள் ஆர் - அறியாமை நிறைந்த, ஆக்கை - உடம்பாகிய, இது பொறுத்து - இதனைச் சுமந்து, எய்த்தேன் - இளைத்தேன்; மருள் ஆர் மனத்து - மயக்கம் பொருந்திய மனத்தையுடைய, ஓர் உன்மத்தன் - ஒரு பித்தன், வரும் என்று - வருகிறான் என்று, இங்கு எனைக் கண்டார் - இவ்வுலகில் என்னைப் பார்ப்பவர்கள், வெருளாவண்ணம் - அஞ்சாவண்ணம், நான் மெய்யன்பைப் பெற வேண்டும் - நான் வீடு பேறடையும் பொருட்டு உண்மையான அன்பினைப் பெறவேண்டும்.