பதப்பொருள் : சிவனே - சிவபெருமானே, துணியா - துணிந்து, உருகா - மனம் உருகி, அருள் பெருக - உன் அருள் பெருகும்படி, தோன்றும் - விளங்கும், தொண்டர் இடைப் புகுந்து - அடியாரிடையே கூடி, திணி ஆர் - வலிமை பொருந்திய, மூங்கில் - மூங்கிலைப் போன்ற, சிந்தையேன் - சித்தத்தையுடைய யான், நின்று தேய்கின்றேன் - இருந்து மெலிகின்றேன், அருள் அளிய - உன் உள்ளத்தில் அருள் மிகுந்து, அணி ஆர் - கூட்டமாகப் பொருந்திய, அடியார் - உன் அடியார்கள், உனக்கு உள்ள - உன்பால் கொண்டுள்ள, அன்பும் தாராய் - மெய்யன்பினையும் எனக்குத் தருவாயாக, தணியாது - காலம் தாழ்க்காது, ஒல்லை வந்தருளி - விரைவாக எழுந்தருளி, தளிர் - தளிர் போன்ற, பொன் பாதம் தாராய் - பொன்னடிகளையும் தருவாயாக. விளக்கம் : துணிதலாவது, 'இறைவனே பொருள்' என்று கொள்ளுதல். 'அன்பினால் ஆவியோடாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகும்' அடியார்களாதலின், அவர்களை, 'உருகா அருள் பெருகத் தோன்றுந்தொண்டர்' என்றார். 'ஆனால், மூங்கிலைப் போன்ற திண்மையான மனமுடையேனாதலின், அன்பு இல்லை' என்பார், 'திணியார் மூங்கிற் சிந்தையேன்' என்று வருந்துகிறார். உண்மையான அடியவரது அன்பைப் போன்ற மெய்யம்பைப் பெற வேண்டும் என்றும், உனது திருவடிப் பேற்றைத் தர வேண்டும் என்றும் வேண்டியபடியாம். இதனால், திருவடிப்பேறு கூறப்பட்டது. 8 தாரா அருளொன் றின்றியே தந்தாய் என்றுன் தமரெல்லாம் ஆரா நின்றார் அடியேனும் அயலார் போல அயர்வேனோ சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா பேரா னந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே. பதப்பொருள் : பெருமானே - பெருமையுடையோனே, தாரா அருள் - எமக்குத் தாராத அருள், ஒன்று இன்றித் தந்தாய் என்று - ஒன்றும் இல்லாது முழுவதும் தந்தனையென்று, உன் தமர் எல்லாம் - உன்னடியார் எல்லோரும், ஆராநின்றார் - மகிழ்ந்திருந்தனர்; அடியேனும் - அடியேனாகிய யான் மட்டும், அயலார் போல - வேற்றவர் போல, அயர்வேனோ - வருந்துவேனோ; சீர் ஆர் அருளால் - சிறப்புப் பொருந்திய உன் திருவருளால், சிந்தனையைத் திருத்தி - என் சித்தத்தைத் திருத்தி, ஆண்ட - ஆண்டருளின, சிவலோகா - சிவலோகநாதனே, பேர் ஆனந்தம் - பேரின்ப மானதும், பேராமை - நீங்காமல், வைக்க வேண்டும் - வைத்தல் வேண்டும். விளக்கம் : சிந்தனையைத் திருத்தலாவது, சித்தத்தைச் சிவன்பாலே வைக்கச் செய்தல். 'இங்ஙனம் திருத்தம் பெற்றிருந்தும், பேரின்பம் இடையீடின்றிக் கிடைக்கவில்லையே!
|