518


பதப்பொருள் : வேண்டத் தக்கது அறிவோய் நீ - உயிர்களுக்குத் தேவையானது இது என்று அறிவோன் நீயே; மேலும், வேண்ட - அவ்வுயிர்கள் எவற்றை வேண்டினாலும், முழுதும் தருவோய் நீ - அவையெல்லாவற்றையும் அருளுபவனும் நீயே; வேண்டும் அயன்மாற்கு - உன்னைக் காண விரும்பிய பிரமன் திருமால் என்பவருக்கும், அரியோய் நீ - அருமையாய் நின்றவனாகிய நீ; வேண்டி - நீயாகவே விரும்பி, என்னைப் பணி கொண்டாய் - என்னையாளாகக் கொண்டனை; நீ வேண்டி - என் பொருட்டு நீ விரும்பி, யாது அருள் செய்தாய் - எதனை அருள் செய்தனையோ, அதுவே யானும் வேண்டின் அல்லால் - அதனையே யானும் விரும்புவதல்லது, வேண்டும் பரிசு ஒன்று - நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று, உண்டு என்னின் - உளதாகுமெனில், அதுவும் உன்றன் விருப்பு அன்றே - அந்தப் பொருளும் உன்னிடத்தில் நான் வைக்கின்ற அன்பேயன்றோ?

விளக்கம் : உயிர்களுக்குத் தேவையானது எது என்று உணர் பவன் இறைவனாதலின், அவை அவன்பால் ஒன்றையும் வேண்ட வேண்டுவது இல்லை என்பார், 'வேண்டத் தக்கதறிவோய் நீ' என்றும், அவ்வாறு இருப்பினும் உயிர்கள் தம் அறியாமையால் பலவற்றை வேண்ட அவற்றைக் குறைவற அளித்து வருகிறான் என்பார், 'வேண்ட முழுதும் தருவோய் நீ' என்றும் உனது திருவுள்ளக் குறிப்பின்படி நடப்பதே அடியவர் கடமை என்பார், 'நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்' என்றும், இத்தகைய நிலையில் அடியவர்கள் தங்கள் பெருவிருப்பால் தாங்களாக இறைவன்பால் வேண்டிக்கொள்வது அவனிடத்தில் உண்டாக வேண்டிய அன்பே என்பார், 'வேண்டு பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே?' என்றும் கூறினார்.

இதனால், இறைவன் அடியார்களது அன்பின் நிலை கூறப்பட்டது.

6

அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே.

பதப்பொருள் : எண்டோள் - எட்டுத்தோள்களையும், முக்கண் - மூன்று கண்களையும் உடைய, எம்மானே - எம் தலைவனே, குன்றே அனையாய் - மலையை ஒத்த பெரியோனே, அன்றே - என்னை ஆட்கொள்ள வந்த அன்றே, என்னை ஆட்கொண்ட போதே - என்னை ஆட்கொண்ட அப்பொழுதே, என்றன் ஆவியும் -