525


என்றார். 'ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்?' என்ற திருவெம்பாவைப்பகுதியையும் காண்க.

இதனால், இறைவன் வாக்கிலும் மனத்திலும் கலந்திருக்கிறான் என்பது கூறப்பட்டது.

4

பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி
நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீர்ஓடி வம்மின்
தெற்றார்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை இறைசீர்
கற்றாங்கவன் கழல்பேணின ரொடுங்கூடுமின் கலந்தே.

பதப்பொருள் : பற்று அவை அற்றீர் - உலகப் பற்றுகளாகிய அவற்றை ஒழித்தவராய், பற்றும் - இறைவனைப் பற்றுகின்ற, பற்று - ஆதரவாகிய, அது - அதனை, பற்றி - பிடித்து, நற்று ஆம் கதி - நல்லதொரு பதவியினை, அடைவோம் எனில் - அடைய விரும்பினால், கெடுவீர் - அந்தோ! ஓடி வம்மின் - ஒடி வாருங்கள்; தெற்று ஆர் சடை முடியான் - பின்னலையுடைய சடையை யுடையவனும், மன்னு - நிலை பெற்ற, திருப்பெருந்துறை இறை - திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனுமாகிய பெருமானது, சீர் - புகழை, கற்று ஆங்கு - கற்றவாறே, அவன் கழல் - அவனது திருவடியை, பேணினரொடும் - விரும்பினவராகிய அடியாரோடும், கலந்து கூடுமின் - கலந்து அடைவீர்களாக!

விளக்கம் : முதற்கண்ணுள்ள 'ஆங்கு' இரண்டும் அசைகள். உலகப்பற்றுகளை அறுத்து இறைவனது பற்றினையே பற்ற வேண்டும் என்பார், 'பற்றாங்கவை அற்றீர் பற்றும் பற்றாங்கது பற்றி' என்றார்.

'பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு'

என்ற நாயனார் மறைமொழியையும் காண்க. 'நன்று' என்பது 'நற்று' என வலித்தல் விகாரம் பெற்றது. 'அதற்கு வழி யாதெனின், அடியாரோடு கூடுவதேயாம்' என்பார், 'கழல் பேணினரொடுங் கூடுமின் கலந்தே' என்றார். அடியார் கூட்டம் இறைவன் திருவடியைச் சேர்ப்பிக்கும் என்பதாம்.

இதனால், அடியார் கூட்டம் உலகப்பற்றுகளைப் போக்கும் என்பது கூறப்பட்டது.

5

கடலின்திரை யதுபோல்வரு கலக்கம்மலம் அறுத்தென்
உடலும்என் துயிரும்புகுந் தொழியாவண்ணம் நிறைந்தான்
சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும்
படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான்செய்த படிறே.