527


- அதனையே அணிந்துகொண்டேன், இனிப் புறம் போகேன் - இனிமேல் அதனை விட்டு நீங்கேன்; புறம் போகல் ஒட்டேன் - என்னை விட்டு அது நீங்குவதற்கும் இசையமாட்டேன்.

விளக்கம் : புகழ் பெருமையைத் தருவதும், செல்வம் இன்பத்தைத் தருவதுமாய் இருப்பினும், முத்தியைத் தாராது பிறப்பையே தருமாதலின், அவற்றை வேண்டேன் என்றார். இனி, இறைவன் திருவடியே நிலையான இன்பத்தைத் தருவதாதலின், 'சேர்ந்தேன் மன்னு திருப்பெருந்துறை இறைதாள்' என்றார். இறைவன் திருவடி இன்பமே நிலையானது என்பதாம்.

இதனால், புகழ் செல்வம் முதலிய பற்றுகள் எல்லாம் பிறவிக்குக் காரணமாம் என்பது கூறப்பட்டது.

7

கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமு தென்கோ
ஆற்றேன்எங்கள் அரனேஅரு மருந்தேஎன தரசே
சேற்றார்வயல் புடைசூழ்தரு திருப்பெருந்துறை உறையும்
நீற்றார்தரு திருமேனிநின் மலனேஉனை யானே.

பதப்பொருள் : எங்கள் அரனே - எங்கள் சிவபெருமானே, அருமருந்தே - அருமையான மருந்தே, எனது அரசே - எனக்கு அரசனே, சேற்று ஆர் - சேற்றினால் நிறைந்த, வயல் - நன்செய்கள், புடை சூழ்தரு - பக்கங்களில் சூழப்பெற்ற, திருப்பெருந்துறை உறையும் - திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற, நீற்று ஆர்தரு - திருவெண்ணீற்றால் நிறைந்த, திருமேனி - திருமேனியையுடைய, நின்மலனே - நின்மலனே, உனை யான் - உன்னை அடியேன், எனக்குக் கோல் தேன் என்கோ - எனக்குக் கிடைத்த கொம்புத்தேன் என்பேனோ! குரைகடல்வாய் - ஒலிக்கின்ற பாற்கடலில் தோன்றிய, அமுது என்கோ - அமுதம் என்பேனோ, ஆற்றேன் - சொல்ல முடியாதவன் ஆயினேன்.

விளக்கம் : 'சூழ்தரு, ஆர்தரு' என்பன ஒருசொல் நீர்மையன. இறைவன் திருவடியனுபவம் மிகமிகச் சுவையுடையது என்பார், 'கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமு தென்கோ' என்றார், அடுத்து அவ்வனுபவம் எவ்வாறு இருந்தது என்று சொல்ல முடியாது என்பார், 'ஆற்றேன்' என்றார். இறையின்பம் அனுபவத்துக்கே உரியது என்பதாம்.

இதனால், இறைவன் பேரின்பத்தை நல்க வல்லவன் என்பது கூறப்பட்டது.

8