543


இதனால், இறைவன் முத்திப் பரிசினை வழங்கும் வள்ளல் என்பது கூறப்பட்டது.

6

மாய வனப்பரி மேல்கொண்டு
மற்றவர் கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும்
பகைகள் புகுந்தவருக்
காய அரும்பெருஞ் சீருடைத்
தன்னரு ளேயருளுஞ்
சேய நெடுங்கொடைத் தென்னவன்
சேவடி சேர்மின்களே.

பதப்பொருள் : மாய வனப்பரிமேல் கொண்டு - தான் மாயமாகிய அழகிய குதிரையின்மேல் வர, அதனை அறியாது, மற்றவர் கைக்கொளலும் - பிறர் எல்லாரும் அதனை உண்மை என்றே ஏற்றுக்கொண்டவுடன், இப்பிறப்பு என்னும் பகைகள் போய் அறும் - இப்பிறவியாகிய பகைகள் அற்று ஒழியாநின்றன்; ஆகவே, புகுந்தவருக்கு - தன்னைச் சரணாக அடைந்தவருக்கு, ஆய - பொருந்திய, அரு - அருமையான, பெருஞ்சீர் உடை - பெரிய சிறப்பையுடைய, தன் அருளே அருளும் - தனது திருவருளையே அவன் கொடுத்தருளுவான் என்பது தெளிவாகியது; ஆதலின், சேய நெடுங்கொடை - செம்மையாகிய பெரிய கொடையையுடைய, தென்னவன் - தென்னாடுடைய அச்சிவபிரானது, சேவடி - திருவடியையே, சேர்மின்கள் - புகலிடமாக அடையுங்கள்.

விளக்கம் : அடிகள்பொருட்டு இறைவன் கொண்டுவந்த பரி நரியேயாதலின், 'மாய வனப்பரி' என்றார். 'மற்றவர்' என்றது. பாண்டியன் முதலான அனைவரையும் குறித்தது. சிவபிரான், நரியைப் பரியாக்கித் திருவிளையாடல் செய்து, அடிகளது பிறவியையும், பாண்டியனது பிறவியையும் அறுத்தருளினான் என்றபடி. இடைவிடாது பேரின்பம் அனுபவித்தற்குப் பிறவி தடையாகவுள்ளமையின், பிறவியைப் பகை என்றார். 'வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை' என்ற நாயனார் வாக்கும் இவ்வுண்மையினைத் தெளிவுபடுத்தும். பிறவியாகிய துன்பத்தினின்றும் எடுத்துத் திருவருளாகிய இன்பத்தில் திளைக்கச் செய்வானாதலின், 'தென்னவன் சேவடி சேர்மின்கள்' என்று அறிவுறுத்துகின்றார்.

இதனால், துன்ப நீக்கத்தையும் இன்ப ஆக்கத்தையும் தருபவன் இறைவன் என்பது கூறப்பட்டது.

7