545


அன்பரை - அடியார்களை, என்பு உருக்கும் - எலும்பையும் உருகச் செய்கின்ற, பாரம்பாண்டியனார் - மேலான பாண்டிப்பிரானா ராகிய இறைவர், புரவியின் மேல்வர - குதிரையின்மேல் எழுந்தருளி வர, அதனைக் கண்டு அக்காட்சியால், புந்தி கொளப்பட்ட - மனம் கவரப்பட்ட, பூங்கொடியார் - பூங்கொடி போன்ற பெண்டிர், மரம் இயல் மேல் கொண்டு - மரத்தின் தன்மையை அடைந்து, மறந்து - எல்லாவற்றையும் மறந்து, தம்மையும் தாம் அறியார் - தம்மையும் தாம் அறியாராயினார்.

விளக்கம் : தீவினை என்றது இருவினையையுமாதலின், 'விரவிய தீவினை' என்றார். இரண்டுமே பிறவிக்குக் காரணம் என்க. 'பூங்கொடியார் மர இயல் மேற்கொண்டு' என்றதில் கொடி களெல்லாம் மரங்களாய்விட்டன என்ற நயத்தினைக் காண்க. உணர்ச்சியற்றோரைக் 'கட்டை போன்றோர்' என்று உலகவர் கூறுவதையும் ஒப்பிட்டுக்கொள்க. இஃது அகப்பொருள் முறையில் வைத்து இறைவனைக் கண்ட பொழுது பக்குவம் வாய்ந்த அன்பர்கள், தந்போதத்தை இழந்து சிவபோதம் மேலிட்டு நிற்றலைக் குறித்தபடியாம்.

இதனால், இறைவன் அன்பருக்கு இன்பம் நல்குவான் என்பது கூறப்பட்டது.

9

கூற்றைவென் றாங்கைவர் கோக்களை
யும்வென் றிருந்தழகாய்
வீற்றிருந் தான்பெருந் தேவியும்
தானும்ஓர் மீனவன்பால்
ஏற்றுவந் தாருயி ருண்ட
திறல்ஒற்றைச் சேவகனே
தேற்றமி லாதவர் சேவடி
சிக்கெனச் சேர்மின்களே.

பதப்பொருள் : கூற்றை வென்று - இயமனை வென்று, ஆங்கு - அவ்வாறே, ஐவர் கோக்களையும் வென்று இருந்து - ஐம்புலன்களாகிய அரசரையும் அடக்கிக்கொண்டு, பெருந்தேவியும் தானும் - பெரிய சத்தியும் தானுமாக, அழகாய் வீற்றிருந்தான் - அழகாய் எழுந்தருளியிருந்தானாகிய இறைவன், ஓர் மீனவன்பால் -ஒப்பற்ற பாண்டிய மன்னனுக்காக, ஏற்று வந்தார் உயிர் - எதிர்த்து வந்தவர்களது உயிரை, உண்ட - வாங்கின, திறல் - வலிமையுள்ள, ஒற்றைச்சேவகள் - ஓர் வீரனாயினான்; ஆகையால், தேற்ற மிலாதவர் - தெளிவில்லாதவர்கள், சேவடி - அவனது சிவந்த திருவடியை, சிக்கெனச் சேர்மின்கள் - உறுதியாகச் சென்று பற்றிக்கொள்ளுங்கள்.