ஒருமுகப்படுத்தி, உடம்பினுள் உத்தமனைக் காண்பதற்கு உற்ற இடம் வேண்டும் என்பார், 'சிந்தை நணுகும் வண்ணம் நானணுகும் தில்லை' என்றார். இதனால், எடுத்த தேகம் விழுமுன்னர் அதனாலாகும் பயனை அடைந்துவிட வேண்டும் என்பது கூறப்பட்டது. 6 மதிக்கும் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய மிதிக்குந் திருவடி என்தலைமேல் வீற்றிருப்பக் கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங் கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. பதப்பொருள் : மதிக்கும் - யாவரும் மதித்தற்குரிய, திறல் உடைய - வெற்றியையுடைய, வல் அரக்கன் - வலிமை வாய்ந்த அரக்கனாகிய இராவணனது, தோள் நெரிய - தோள் நொறுங்கும்படி, மிதிக்கும் - ஊன்றின, திருவடி - திருவடியானது, என் தலைமேல் வீற்றிருப்ப - எனது தலைமேல் பொருந்தியிருக்க, கதிக்கும் - பெருகுகின்ற, பசுபாசம் - பசுத் தன்மையை உண்டாக்குகின்ற பாசங்களில், ஒன்றும் இலோம் என - யாதொன்றும் இல்லேமாயினோம் என்று, களித்து - மகிழ்ந்து, இங்கு அதிர்க்கும் - இங்கு ஆரவாரித்தற்குக் காரணமாகிய, குலாத்தில்லை ஆண்டானை - விளக்கம் பொருந்திய தில்லை ஆண்டவனை, கொண்டு அன்றே - அடியேன் பற்றிக்கொண்டேன் அல்லவா? விளக்கம் : இறைவன் திருவடி இராவணன்மேல் பட்டவுடன் அவனது செருக்கு அடங்கியது் அதைப் போல, என் தலைமேல் வைத்தவுடன் என்னுடைய ஆணவம் அடங்கியது' என்றார். அறியாமை நீங்கியபின், இன்பம் பெருகுமாதலின், 'களித்திங்கு அதிர்க்கும்' என்றார். இதனால், இறைவன், திருவடி சூட்டிய பின் பேரின்பம் உண்டாகும் என்பது கூறப்பட்டது. 7 இடக்குங் கருமுருட் டேனப்பின் கானத்தே நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால் கடக்கும் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லாட்டை அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. பதப்பொருள் : இடக்கும் - பூமியைத் தோண்டும் இயல்புடைய, கரு - கருமையான, முருட்டு - முரட்டுத்தனமுள்ள, ஏனப்பின் - பன்றியின் பின்னே, கானகத்து - காட்டில், நடக்கும் திருவடி - நடந்த திருவடிகளை, என்தலைமேல் நட்டமையால் - என்னுடைய தலையின்மேல் இருக்க வைத்தமையால், கடக்கும் திறல் - என்னை வெல்லும் திறமையுடைய, ஐவர் - ஐம்பொறிகளாகிய, கண்டகர்தம் - கொடியவர்களுடைய, வல் ஆட்டை - வலிமையான சேட்டைகளை அடக்கும் - அடக்குகின்ற, குலாத்தில்லை ஆண்டானை - விளக்கம்
|