நினையாது - எண்ணாது, பொய்களே புகன்று போய் - பொய்களையே சொல்லித் திரிந்து, கருங்குழலினார் - கரிய கூந்தலையுடைய பெண்களது, கண்களால் ஏறுண்டு - கண்களாகிய வேலினால் தாக்கப்பட்டு, கலங்கியே கிடப்பேனை - கலக்கமுற்றுக் கிடக்கும் என்னை, எங்கள் பெருமான், திருந்து சேவடி - திருத்தமாகிய திருவடியில் அணியப்பட்ட, சிலம்பு அவை - சிலம்புகளாகிய அவை, சிலம்பிட - ஒலித்திட, திருவொடும் அகலாது - உமையம்மையோடும் நீங்காது, அருந்துணைவனாய் - எனக்கு அருமையான துணைவனாகிய, ஆண்டுகொண்டருளிய - ஆண்டுக்கொண்டருளின, அற்புதம் அறியேன் - அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன். விளக்கம் : 'பொருந்தும் இப்பிறவி' என்றது, வினைக்கேற்ப மாறிமாறிப் பொருந்துகின்ற பிறவி என்பதாம். 'ஏறுண்டு' என்றதனால் கண்களை வேலாக உருவகம் செய்தல் பெறப்பட்டது. 'வேலினால் தாக்குண்டு வருந்துகின்ற எனக்கு உற்ற துணைவனாய் வருத்தத்தைப் போக்கியாட்கொண்டான் இறைவன் என்பார், 'அருந்துணைவனாய் ஆண்டு கொண்டருளிய அற்புதம்' என்றார். 'அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை' என்ற திருநாவுக்கரசர் வாக்கையும் ஒப்பிட்டுக்கொள்க. இதனால், இறைவன் பிறப்பு இறப்புகளைப் போக்க வல்லவன் என்பது கூறப்பட்டது. 4 மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங் கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே. பதப்பொருள் : மாடும் - செல்வமும், சுற்றமும் - உறவும், மற்று உள போகமும் - இன்னுமுள்ள அனுபவப் பொருள்களும் என்னும் இவற்றோடும், மங்கையர்தம்மோடும் - பெண்களோடும், கூடி - சேர்ந்து, அங்கு உள - அவ்விடங்களில் உள்ள, குணங்களால் ஏறுண்டு - தன்மைகளால் தாக்கப்பட்டு, குலாவியே திரிவேனை - களித்துத் திரிகின்ற என்னை, வீடு தந்து - எனக்கு அவற்றினின்றும் விடுபடுதலை அருளி, என்றன் வெந்தொழில் வீட்டிட - எனது தீவினைகளை நீக்குதற்பொருட்டு, எங்கள் பொருமான், மெல்மலர் - மென்மையான தாமரை மலர் போன்ற, கழல் காட்டி - தனது திருவடியைக் காட்டி, எனது அகம் புகுந்து - என் மனத்தில் புகுந்து, ஆண்டு - ஆட்கொண்டு, ஆடுவித்து - ஆனந்தத்தால் நடிக்கச் செய்ததாகிய, ஓர் அற்புதம் அறியேன் - ஒப்பற்ற அதிசயச்செயலின் பெருமையை அறிய வல்லேனல்லேன்.
|