578


குணம் என்பன, முக்குணங்கள். குறி என்பன, வடிவங்கள். இறைவன் இவ்விறு திறங்களும் இல்லாது அருளே உருவாய் உள்ளவன் ஆதலின், 'குணங்களுங் குறிகளுமிலாக் குணக்கடல்' என்றார். 'சிற்றின்பக் கடலில் மூழ்கித் திளைத்திருக்கும் என்னைப் பேரின்பக் கடலில் ஆழ்த்தி அருளிய கருணை என்னே!' என்று வியந்தபடி 'குணக்கடல்' என்றது உருவகம். கோமளம், ஆகுபெயர்.

இதனால், இறைவன் தன் அடியார்களைப் பேரின்பத்தில் திளைக்கச் செய்வான் என்பது கூறப்பட்டது.

6

இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான்
இயல்பொடஞ் செழுத்தோதித்
தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான்
தடமுலை யார்தங்கள்
மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை
மலரடி யிணைகாட்டி
அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.

பதப்பொருள் : நான் இப்பிறப்பினில் - நான் இப்பிறவியில். இணை மலர் கொய்து - பொருத்தமான மலரைப் பறித்து, அஞ்சு எழுத்து - திருவைந்தெழுத்தினை, இயல்பொடும் ஓதி - சொல்ல வேண்டிய முறைப்படி சொல்லி, தப்பு இலாது - பிழைத்தல் இல்லாமல், பொற்கழல்களுக்கு இடாது - அவனது பொன்னடிகள்மேல் சொரியாமல், நான் - யான், தடமுலையார் தங்கள் - பெரிய தனங்களையுடைய பெண்களது, மைப்பு உலாம் கண்ணால் - மை தீட்டுதல் பொருந்திய கண்ணாகிய வேலினால், ஏறுண்டு கிடப்பேனை - எறியப்பட்டுக் கிடக்கின்றவனாகிய என்னை, அப்பன் - என் தந்தையாகிய சிவபெருமான், வந்து - எழுந்தருளி வந்து, மலர் அடியிணை காட்டி - தன் தாமரை மலர் போலும் திருவடியிணையினைக் காட்டி, ஆண்டு கொண்டருளிய - ஆட்கொண்டருளின, அற்புதம் அறியேன் - அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

விளக்கம் : 'மானுடப் பிறவியின் பயன், விதிப்படி அஞ்செழுத்து ஓதி மலர் தூவித் தன்னை மறந்து இறைவனை வழிபடுதல்; அதனைச் செய்யாது யான் மாதராசையில் மயங்கிக் கிடக்கின்றேன்' என்பார், 'நான் தடமுலையார்தங்கள் மைப்பு உலாங் கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை' என்றார். 'எனினும், நான் செய்த பிழையினைப் பொறுத்துத் திருவடி ஞானம் தந்தருளிய கருணை என்னே!' என்பார், 'மலரடி யிணைகாட்டி அப்பன் என்னை வந்தாண்டுகொண்டருளிய அற்புதம் அறியேனே' என்றார்.

இதனால், இறைவனைத் திருவைந்தெழுத்தினை ஓதி மலரிட்டு வழிபட வேண்டும் என்பது கூறப்பட்டது.

7