579


ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின
இருவினை அறுத்தென்னை
ஓசை யாலுணர் வார்க்குணர் வரியவன்
உணர்வுதந் தொளியாக்கிப்
பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன்
பரம்பெருங் கருணையால்
ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய
அற்புதம் அறியேனே.

பதப்பொருள் : ஊசல் ஆட்டும் - பிறப்பு இறப்புகளாகிய ஊசலில் வைத்து ஆட்டுகின்ற, உடல் ஆயின - உடம்பின்கண் உள்ள உயிரிலே பொருந்திய, இரு வினை அறுத்து - நல்வினை தீவினை என்னும் இரண்டையும் களைந்து, என்னை - அடியேனை, ஓசையால் - நூலறிவால், உணர்வார்க்கு - அறிய முற்படுவார்க்கு, உணர்வு அரியவன் - அறிய முடியாதவனாகிய இறைவன், உயர்ந்த - உயர்வாகிய, தன் பரம்பெருங் கருணையால், உணர்வு தந்து - ஞானத்தைக் கொடுத்து, ஒளி ஆக்கி - ஞான மயமாக்கி, பாசமானவை - மும்மலக்கட்டுகளை, பற்றறுத்து - அறவே தொலைத்து, ஆசை தீர்த்து - அவாவையறுத்து, அடியார் அடி கூட்டிய - தன் அடியார்களது அடியின்கீழ்ச் சேர்த்த, அற்புதம் அறியேன் - அதிசயச் செயலின் பெருமையை யான் அறிய வல்லேனல்லேன்.

விளக்கம் : உயிரை உடம்பு பிறப்பு இறப்புகளில் அகப்படுத்தி உழலச் செய்வதால், 'ஊசலாட்டுமிவ்வுடல்' என்றும், பல வகைப் பிறப்பிலும் உயிர் உடம்பில் நின்று இருவினைகளைச் செய்வதால், 'உடல் உயிராயின இருவினை' என்றும் கூறினார் 'இவ்விருவினையினால் உந்தப்பட்டுக் கிடக்கும் எனக்கு ஞானத்தைத் தந்து, அதற்கு மேலும் சாந்தியைக் கொடுக்கத் தன் அடியார்கள் திருவடிகளுக்கு ஆளாக்கியருளிய கருணை என்னே!' என்று வியந்து போற்றுவார், 'கருணையால் ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே' என்றார்.

இதனால், இறைவன் ஆசையைத் தீர்த்து அமைதியை அருள வல்லவன் என்பது கூறப்பட்டது.

8

பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான்
புழுத்தலை நாய்போல
இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங்
கிணங்கியே திரிவேனை
இச்ச கத்தரி அயனுமெட் டாததன்
விரைமலர்க் கழல்காட்டி
அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய
அற்புதம் அறியேனே.