586


மூங்கிலையொத்த, தோள் - தோளினையுடைய, உமை பங்கன் - உமையம்மையின் பாகனும், எங்கள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவன், காயத்துள் - எனது உடம்பினுள், அமுது ஊற ஊற - அமுதம் இடைவிடாது பெருகுமாறு, நீ கண்டுகொள் என்று காட்டிய - நீ பார் என்று காட்டியருளிய, சேய மாமலர் - சிறந்த செந்தாமரை மலர் போன்ற, சேவடிக்கண் - சிறந்த திருவடியின்கீழே, நம் சென்னி மன்னி - நம் தலை நிலைபெற்று நின்று, திகழும் - விளங்கும்.

விளக்கம் : 'திருப்பெருந்துறைப் பெருமான் நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளியதோடு உடம்பினுள்ளும் புகுந்து இன்பம் பெருகும்படி செய்தான்' என்பார், 'திருப்பெருந்துறை மேவினான் காயத்துள் அமுது ஊற ஊறக் காட்டிய சேவடி' என்றார். 'காட்டிய சேவடி' என்றது, 'காணுதற்கரிய திருவடியைக் காட்டினான்' என்றபடி.

இதனால், இறைவன் அடியார்களுக்கு இன்பத்தினை நல்கியருளுவான் என்பது கூறப்பட்டது.

5

சித்த மேபுகுந் தெம்மையாட்கொண்டு
தீவி னைகெடுத் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்கழற்கணே
பன்மலர் கொய்து சாத்தலும்
முத்தி தந்திந்த மூவுலகுக்கும்
அப்பு றத்தெமை வைத்திடும்
மத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே.

பதப்பொருள் : சித்தமே புகுந்து - சித்தத்திலே புகுந்து, எம்மை ஆட்கொண்டு - எம்மை அடிமையாகக்கொண்டருளி, தீவினைகெடுத்து - தீயவாகிய வினைகளை அழித்து, உய்யலாம் பத்தி தந்து - உய்வதற்குரிய அன்பினைக் கொடுத்து, தன் பொன் கழற்கண்ணே - தனது அழகிய திருவடியின்கண்ணே, பல் மலர் கொய்து சாத்தலும் - பல வகையான மலர்களைப் பறித்து இடுதலும், முத்தி தந்து - விடுதலையைக் கொடுத்து, இந்த மூவுலகுக்கும் அப்புறத்து - இந்த மூன்று உலகங்களுக்கும் அப்பால், எமை வைத்திடும் - எம்மைப் பேரின்பத்தில் வைக்கின்ற, மத்தன் - ஊமத்தம்பூவை அணிகின்ற இறைவனது, மாமலர் சேவடிக்கண் - சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின்கீழே, நம் சென்னி மன்னி - தமது தலை நிலைபெற்று நின்று, மலரும் - பொலிவு பெற்று விளங்கும்.

விளக்கம் : 'சித்தமே புகுந்து, ஆட்கொண்டு, பத்தி தந்து' என்றதனால், இங்குப் 'பத்தி' என்றது, உண்மை ஞானத்தின்பின்