துறவு செய்தமை பெறப்பட்டது. திருவடிப்பேறு பெற்றவர் சிவபத்தரோடே இணங்கியிருப்பார் என்பதை, "மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்கும் சிறப்பில்லார் தம்திறத்துச் சேர்வை - அறப்பித்துப் பத்தர் இனத்தாய்ப் பரனுணர்வி னால்உணரும் மெய்த்தவரை மேவா வினை" என்னும் சிவஞானபோத வெண்பாவால் உணர்க. தம்மை இறைவன், தன் அடியாரோடு கூட்டுதலை அருள் காரணமாகவே செய்தானாதலின், ' தன் உண்மைப் பெருக்கமாம் திறமை காட்டிய' எனப் புகழ்ந்தார். இதனால், இறைவன் புத்தடியார்க்குப் பேரின்ப நிலை பெற, அவர்களைப் பழவடியார் கூட்டத்துள் வைப்பான் என்பது கூறப்பட்டது. 7 புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய்த னையொழி வித்திடும் எழில்கொள் சோதிஎம் ஈசன்எம்பிரான் என்னுடை அப்பன் என்றென்று தொழுத கையின ராகித்தூய்மலர்க் கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு வழுவி லாமலர்க் சேவடிக்கண்நம் சென்னி மன்னி மலருமே. பதப்பொருள் : புழுவினால் பொதிந்திடு - புழுக்களால் நிறைந்துள்ள, குரம்பையிற் பொய்தனை - உடம்பில் பொருந்தி நிற்கும் நிலையற்ற வாழ்வை, ஒழிவித்திடும் - ஒழிக்கின்ற, எழில்கொள் சோதி - அழகையுடைய சோதியே, எம் ஈசன் - எம்மை ஆள்பவனே, எம்பிரான் - எம்பெருமானே, என்னுடை அப்பன் - என்னுடைய தந்தையே, என்று என்று - பலகால் சொல்லி, தொழுத கையினர் ஆகி - கூப்பிய கையையுடையவராய், தூய்மலர் - தூய்மையான தாமரை மலர் போன்ற, கண்கள் - கண்களில், நீர் மல்கும் - ஆனந்தக் கண்ணீர் சொரியும், தொண்டர்க்கு - அடியார்களுக்கு, வழுவிலா - தவறாது கிடைக்கின்ற, மலர் - தாமரை மலர் போன்ற, சேவடிக்கண் - சிவந்த திருவடியின்கீழே, நம் சென்னி மன்னி - நமது தலை நிலைபெற்று நின்று, மலரும் - பொலிவுற்று விளங்கும். விளக்கம் : குரம்பையிற் பொய்யை ஒழிவித்தலாவது, பிறவியைப் போக்குதல். அன்பினால் நீர் மல்கும் கண்கள் என்பதுபற்றி, 'தூய்மலர்க் கண்கள்' என்றார். 'இறைவனது திருநாமத்தைப் பரவி உருகும் அடியார்களுக்கு அவனது திருவடி
|