596


வேவத் திரிபுரம் செற்றவில்லி
வேடுவ னாய்க்கடி நாய்கள் சூழ
ஏவற் செயல்செய்யும் தேவர்முன்னே
எம்பெரு மான்தான் இயங்குகாட்டில்
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன்
எந்தை பெருந்துறை ஆதிஅன்று
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த
கிடப்பறி வாரெம்பி ரானாவாரே.

பதப்பொருள் : திரிபுரம் வேவ - முப்புரம் தீயில் வெந்தொழிய, செற்ற வில்லி - அழித்த வில்லையுடையவனும், எம்பெருமான் - எம்பிரானும், ஈசன் - ஆண்டவனும், எந்தை - எந்தையும் ஆகிய, பெருந்துறை ஆதி - திருப்பெருந்துறை முதல்வன், ஏவல் செயல் செய்யும் - பணியைச் செய்யும், தேவர் முன்னே - தேவர்களது முன்னிலையில், கடி நாய்கள் சூழ - கடிக்கின்ற நாய்கள் சூழ்ந்து வர, தான் வேடுவனாய் இயங்கு காட்டில் - தான் வேடனாகிச் சென்ற காட்டிலே, ஏவுண்ட பன்றிக்கு - அம்பு தைத்து இறந்த பன்றிக்கு, இரங்கி - திருவுளம் இரங்கி, அன்று - அக்காலத்தில், கேவலம் - அற்பமாகிய, கேழல் ஆய் - தாய்ப்பன்றியாகி, பால் கொடுத்த - அதன் குட்டிகளுக்குப் பால் கொடுத்த, கிடப்பு அறிவார் - திருவுள்ளப்பாங்கை அறிய வல்லவர்கள், எம்பிரான் ஆவார் - எமக்குத் தலைவர் ஆவார்கள்.

விளக்கம் : மிகப் பெரியவாகிய முப்புரங்களைச் சிரிப்பினாலே அழித்த பெருமான் மிக அற்பமாகிய பன்றிக்கு இரங்கிப் பால் கொடுத்த தன்மையை அறிய வேண்டும் என்றார். கிடப்பு அறிதலாவது, எல்லாவுயிர்களுக்கும் அருளுவான் என்று அறிதல். பன்றிக்குட்டிக்குத் தாயாய்ப் பால் அருத்திய வரலாறு முன்னர்ப் போற்றித் திருவகவலுட்காண்க. வேடனாய்க் காட்டில் இயங்கியது அர்ச்சுனனுக்காக. அப்பொழுது பன்றியைக் கொன்றவன், இப்பொழுது பன்றிக்கு இரங்கினான் என்றபடி, எனவே, இங்குக் குறிக்கும் காட்டையும் பன்றியையும் முன்னையவை போல ஒன்றுபடக் கூறியது, இனம் பற்றியதாயிற்று.

இதனால், இறைவன் எவ்வுயிர்க்கும் உதவுபவன் என்பது கூறப்பட்டது.

6

நாதம் உடையதோர் நற்கமலப்
போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவியேத்த
ஒளிவளர் சோதிஎம் ஈசன்மன்னும்
போதலர் சோலைப் பெருந்துறைஎம்
புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல் லாரெம்பி ரானாவாரே.