குணங்கள், கருத்து உறும் ஆகாதே - என் மனத்திலே பொருந்துதல் ஆகாது போகுமோ? இது நன்று இது தீது என வந்த - இது நல்லது இது தீயது என்று ஆராய்வதால் உண்டாகிய, நடுக்கம் - மனக்கலக்கம், நடந்தன ஆகாதே - ஒழிதல் ஆகாது போகுமோ? நாம் எல்லாம் - நாம் யாவரும், அடியாருடனே - முன்னைய அடியார்களுடனே, செல - வீட்டுலகிற்சென்று சேர, நண்ணுதும் ஆகாதே - ஒன்றுகூடுவதும் ஆகாது போகுமோ? என்றும் - எந்நாளும், என்அன்பு நிறைந்த - எனது அன்பு நிறைந்த, பராவமுது - மேலான அமுதம், எய்துவது ஆகாதே - அடைவது ஆகாது போகுமோ? விளக்கம் : 'இறைவன் காட்சி வழங்குவனாயின், ஆன்மா உடல் நினைவின்றி இன்புற்றிருக்கும்; பொறிகளும் புலன்களில் சென்று பற்றித்துன்புறா' என்பார், 'ஒன்றினொரு டொன்றுமொரைந்தினொடைந்தும் உயிர்ப்பறு மாகாதே' என்றார். உயிர்ப்பறுதலாவது, சேட்டை அறுதலாம். 'அடியார்க்கேயன்றி, அடியார்க்கு அடியார்க்கும்யாம்அடிமை' என்பார், 'அடியார் அடியார் அடியோம்' என்றார். அடியாராகிய திருநாவுக்கரசருக்கு அடியாராகிய அப்பூதியடிகளுக்கும், மற்றும் அவர் போன்ற சிலர்க்கும் சுந்தரர் அடியாரானமையைத் திருத்தொண்டத் தொகையிற் காண்க. 'கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே' என்று திருப்புலம்பலில் கூறியது போல, இங்குக் 'கன்றை நினைந்தெழுதாய் என வந்த கணக்கு' என்றார். இறைவனது எட்டுக் குணங்களையே 'அனாதி குணங்கள்' என்றார். இறைமைக் குணங்கள் ஆன்மாவில் தங்கிய பின் நன்மை தீமை என்ற வேறுபாடு தோன்றாவாதலின், 'நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன' என்றார். இதனால், இறைவன் வெளிப்பட்டு வருவானாயின், உலகச்சார்பு நீங்கிப் பேரின்பம் உண்டாகும் என்பது கூறப்பட்டது. 2 பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே பாவனை யாய கருத்தினில் வந்த பராஅமு தாகாதே அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே ஆதி முதற்பர மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே சலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன ஆகாதே இந்திர ஞால இடர்பிற வித்துய ரேகுவ தாகாதே என்னுடை நாயக னாகிய ஈசன் எதிர்ப்படு மாயிடிலே. பதப்பொருள் : என்னுடை நாயகன் ஆகிய ஈசன் - என்னுடைய தலைவனாகிய ஈசன், எதிர்ப்படுமாயிடில் - எதிரே தோன்றுவனாயின், பந்த விகார குணங்கள் - பாசத் தொடர்பினால்
|