632


அணி ஆர் முலை - என்னுடைய அழகு பொருந்திய தனங்கள், ஆகம் அளைந்து - இறைவனது திருமார்போடு பொருந்தி, உடன் - உடனாக, இன்புறும் ஆகாதே - இன்புறுதல் ஆகாது போகுமோ? எல்லையில் - எல்லையற்ற, மா - பெரிய, கருணைக்கடல் - அருட்கடலில், இன்று - இப்பொழுது, இனிது - இன்பமாக, ஆடுதும் ஆகாதே - மூழ்குதலும் ஆகாது போகுமோ? நன்மணி நாதம் - நல்ல மணி ஓசை, முழங்கி - சந்தித்து, என் உள்ளுற - என் உள்ளத்திலே பொருந்த, நண்ணுவது ஆகாதே - அதனை நான் அடைதல் ஆகாது போகுமோ? நாதன் - இறைவனது, அணித்திருநீற்றினை - அழகிய திருநீற்றை, நித்தலும் - நாள்தோறும், நண்ணுவது ஆகாதே - அணிவது ஆகாது போகுமோ? மன்னிய அன்பரில் - நிலைபெற்ற அன்பரில், என் பணி - எனது தொண்டானது, முந்துற - முற்பட, வைகுவது ஆகாதே - நிகழ்வது ஆகாது போகுமோ? மாமறையும் - பெருமை பொருந்திய வேதங்களும், அறியா - அறியவொண்ணாத, மலர்ப்பாதம் - தாமரை மலர் போன்ற திருவடிகளை, வணங்குதும் ஆகாதே - வணங்குதலும் ஆகாது போகுமோ? இன் இயல் - இனிய தன்மையுடைய, செங்கழுநீர் மலர் - செங்கழுநீர்மலர் மாலை, என் தலை - என்மேல், எய்துவது ஆகாதே - பொருந்துதல் ஆகாது போகுமோ?

விளக்கம் : 'என்னணியார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறுமாகாதே' என்றது அகப்பொருட்குறிப்பு. 'இறைவன் எழுந்தருளப் பெற்றால் பேரின்பத்தில் திளைக்கலாம்' என்பது இதன் பொருள். இறைவனை உள்ளத்தில் வைத்துத் தியானிக்கும் யோகியர்க்கு மணி ஓசை கேட்கும் என்பர் ஆதலின், 'நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே' என்றார். இறை பணி நிற்றலில் தீவிரத்தைக் காட்டுவார், 'அன்பரில் என்பணி முந்துறவைகுவ தாகாதே' என்றார். 'செங்கழுநீர் மலர் என்தலை எய்துவதாகாதே' என்ற இதுவும் அகப்பொருட்குறிப்பு. 'என்தலை' என்றதில், 'தலை' என்பது ஏழாம் வேற்றுமை உருபு.

இதனால், 'இறைவன் எழுந்தருளுவானாயின், அகத்தில் ஓர் இனிய ஓசை கேட்கும்' என்பது கூறப்பட்டது.

4

மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே
வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே
காதல்செ யும்அடி யார்மனம் இன்று களித்திடு மாகாதே
பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறு மாகாதே
பேரறி யாதஅ னேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன் எழுந்தருளப்பெறிலே.