633


பதப்பொருள் : என்னை உடைப்பெருமான் - என்னை ஆளாகவுடைய பெருமானும், அருள் ஈசன் - அருளுகின்ற ஈசனுமாகிய இறைவன், எழுந்தருளப் பெறில் - எழுந்தருளப்பெற்றால், மண்ணினில் - உலகினில், மாயை மதித்து வகுத்த - மாயா காரியங்களை விரும்பிச் செய்ததனால் உண்டாகிய, மயக்கறும் ஆகாதே - மயக்க உணர்ச்சியறுதல் ஆகாது போகுமோ? வானவரும் - தேவரும், அறியா - அறியவொண்ணாத, மலர்ப்பாதம் - தாமரை மலர் போன்ற திருவடியை, வணங்குதும் ஆகாதே - வழிபடுதலும் ஆகாது போகுமோ? கண் இலி காலம் - ஆணவ இருளில் அழுந்தி அறிவில்லாது கிடந்த காலம், அனைத்தினும் வந்த - முழுவதினும் வந்த, கலக்கு அறும் ஆகாதே - கலக்கமானது அற்றொழிதல் ஆகாது போகுமோ? காதல் செயும் - அன்பு செய்கின்ற, அடியார் மனம் - அடியவரது மனமானது, இன்று - இப்பொழுது, களித்திடும் ஆகாதே - களிப்புற்றிருத்தல் ஆகாது போகுமோ? பெண் அலி ஆண் என - பெண் அலி ஆண் என்றும், நாம் என - நாம் நீர் என்றும், வந்த பிணக்கு - உண்டாகிய மாறுபாடு, அறும் ஆகாதே - அற்று ஒழிதல் ஆகாது போகுமோ? பேர் அறியாத - பெயர்களை அறியாத, அனேக பவங்கள் - பல பிறவிகளினின்றும், பிழைத்தன ஆகாதே - தப்புதல் முடியாது போகுமோ? எண்ணிலியாகிய - எண்ணில்லாத, சித்திகள் - அற்புதச் செயல்கள், வந்து எனை எய்துவது - வந்து என்னை அடைதல், ஆகாதே - ஆகாது போகுமோ?

விளக்கம் : 'இறைவன் எழுந்தருளப்பெற்றால், மாயா காரியப் பொருளால் உண்டாகும் அத்துணை மயக்கங்களும் நீங்கும்' என்பார், 'மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே' என்றார். 'கண்ணிலி காலம்' என்றது, அனாதியே ஆணவ இருட்டறையில் கண்ணிலாக் குழவி போலக் கிடந்த காலமாம், எனினும், இங்குக் கூறப்பட்டது அந்த அனாதி கேவல நிலை போல, சருவசங்கார காலத்தில் உண்டாகும் கேவல நிலையேயாம், இனியும் பிறப்புகள் உண்டாகுமாயின், அவையும் முன்னவை போல அளவற்றனவாய் இருக்குமன்றோ என்னுங் கருத்தினால் 'பேரறியாத அனேக பவங்கள் பிழைத்தன' என்றார்.

இதனால், 'இறைவன் எழுந்தருளினால் எல்லா வேறுபாடுகளும் நீங்கும்' என்பது கூறப்பட்டது.

5

பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படு மாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
தானடி யோம்உட னேஉய வந்து தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே.