648


தன்முனைப்பை. 'எரிந்து சாம்பராகக்கூடிய நிலையற்ற உடம்புக்குரிய இன்பத்தையே பெரிதென எண்ணி மகிழ இருக்கும் எனக்கு நிலையான உயிருக்குரிய இன்பத்தைத் தரும் முத்திப் பேற்றினை அருளியது என்ன அதிசயம்!' என்று வியக்கிறார்.

இதனால், இறைவன் குற்றங்களைக் களைய வல்லவன் என்பது கூறப்பட்டது.

6

தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யுநெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

பதப்பொருள் : தையலார் மையலிலே - பெண்டிர் மயக்கத்திலே, தாழ்ந்து விழக்கடவேனை - அழுந்தி விழக்கூடிய என்னை, பையவே கொடு போந்து - மெல்ல எடுத்து வந்து, பாசம் எனும் - பாசம் என்கின்ற, தாழ் உருவி - தாழ்ப்பாளை நீக்கி, உய்யும் நெறி காட்டுவித்திட்டு - பிழைக்கும் வழியைக் காண்பித்து, ஓங்காரத்து உட்பொருளை - பிரணவத்தின் உண்மைப்பொருளை, ஐயன் - தலைவன் ஆகிய இறைவன், எனக்கு அருளிய ஆறு - எனக்கு அருளிய முறையினை, ஆர் பெறுவார் - உலகில் யாவர் பெற வல்லவர்? அச்சோ - இஃது அதிசயம்.

விளக்கம் : பாசத்தைத் 'தாழ்ப்பாள்' என்றார். தாழ்ப்பாளை நீக்கியதும் உள்ளேயிருக்கும் பொருள் விளங்குவது போல, பாசமாகிய தாழ்ப்பாளை நீக்கியதும் சிவமாகிய பொருள் விளங்குகிறது என்பார், 'பாசமெனுந் தாழுருவி, ஓங்காரத்துட்பொருளை ஐயனெனக் கருளியவாறு' என்றார். ஓங்காரத்துட்பொருள், எல்லாப் பொருட்கும் முதல்வனாகிய இறைவன். 'பாசத்தினால் மூடப்பட்டுத் தாழ்வான நெறியிலே செல்ல இருக்கும் என்னைப் 'பாசத்தை நீக்கி உயர்வான நெறியிலே செலுத்தி உண்மைப் பொருளைக் காணுமாறு அருளியது என்ன அரிசயம்!' என்று வியக்கிறார்.

இதனால், இறைவன் உய்யும் நெறி காட்டுபவன் என்பது கூறப்பட்டது.

7

சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

பதப்பொருள் : சாதல் பிறப்பு என்னும் - இறப்பு பிறப்பு என்கிற, தடஞ்சுழியில் - பெரிய சுழலில் அகப்பட்டு, தடுமாறி -