தடுமாற்றம் அடைந்து, காதலின் மிக்கு - ஆசையில் உயர்ந்து, அணியிழையார் - பெண்டிரது, கலவியிலே விழுவேனை - போகத்திலே விழுகின்ற என்னை, தன் கழலே சேரும் வண்ணம் - தனது திருவடியையே அடையும்படி மாது ஒரு கூறு உடைய பிரான் - பெண்ணை ஒரு பாகத்து உடைய பெருமானும், ஆதி - முதல்வனும் ஆகிய இறைவன், எனக்கு அருளிய ஆறு - எனக்கு அருள் செய்த முறையினை, ஆர் பெறுவார் - உலகில் யார் பெற வல்லவர்? அச்சோ - இஃது அதிசயம்! விளக்கம் : சுழலில் அகப்பட்டவர் சுழன்று கொண்டிருப்பது போல, பிறப்பு இறப்பிலே அகப்பட்டவரும் சுழன்றுகொண்டிருப்பராதலின், சாதல் பிறப்பைத் 'தடஞ்சுழி' என்றார். இனி, சுழலில் அகப்பட்டவர் துணையின்றேல் அழுந்துவது போல, பிறப்பு இறப்பிலே அகப்பட்டவரும் அழுந்துவர் என்பதோடு, 'அணியிழையார் கலவி' என்றதால் மேலே ஏற விடாது ஈர்த்துக்கொள்ளும் கவர்ச்சியும் உடையது இச்சுழல் என்பதையும் குறிப்பித்தார். 'இவ்வாறு அழுந்திக் கிடக்கும் எனக்குத் திருவடியை நல்கி மேலே ஏறச் செய்தமை என்ன அதிசயம்!' என்று வியக்கிறார். இதனால், இறைவன் ஞானத்தை நல்க வல்லவன் என்பது கூறப்பட்டது. 8 செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான் நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. பதப்பொருள் : முதலாய முதல்வன் - மனமே, எல்லாவற்றுக்கு முதற்பொருளாகிய தலைவனும், நம்மையும் ஓர் பொருள் ஆக்கி - நம்மையும் ஒரு பொருளாகச் செய்து, நாய் சிவிகை ஏற்றுவித்த அம்மை - நாயைச் சிவிகையில் ஏற்றினாற்போல உயர்ந்த பதவியை அளித்த தாய் போன்றவனும் ஆகிய இறைவன், செம்மை நலம் அறியாத - நேர்மையாகிய நன்னெறியை அறியாத, சிதடரொடும் திரிவேனை - அறிவிலிகளோடு திரிகின்றவனாகிய என்னை, மும்மை மலம் அறுவித்து - ஆணவம் முதலாய மூன்று மலங்களையும் நீங்கச்செய்து, எனக்கு அருளிய ஆறு - எனக்கு அருள் செய்த முறையினை, ஆர் பெறுவார் - உலகில் யாவர் பெற வல்லவர்? அச்சோ - இஃது அதிசயம்! விளக்கம் : 'சிதடர்' என்பது, 'குருடர்' எனப் பொருள் தருமாதலின், மேன்மை நெறியை அறியும் அறிவில்லாதவர்களைச் சிதடர்' என்றார்.'மும்மை மலம் அறுவித்து' என்றது பாசத்தில்
|