| தொடக்கம் | ||
| 53. திருமுதுகுன்றம் - பழந்தக்கராகம்
|
||
| 570. |
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர் நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும் மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே. |
உரை |
| 571. |
பற்றும் ஆகி வான் உளோர்க்கு, பல் கதிரோன், மதி, பார், எற்று நீர், தீ, காலும், மேலைவிண், இயமானனோடு, மற்று மாது ஓர் பல் உயிர் ஆய், மால் அயனும் மறைகள் முற்றும் ஆகி, வேறும் ஆனான் மேயது முதுகுன்றே. |
உரை |
| 572. |
வாரி, மாகம் வைகு திங்கள், வாள் அரவம், சூடி, நாரி பாகம் நயந்து, பூமேல் நான்முகன்தன் தலையில் சீரிது ஆகப் பலி கொள் செல்வன்; செற்றலும் தோன்றியது ஓர் மூரி நாகத்து உரிவை போர்த்தான்; மேயது முதுகுன்றே. |
உரை |
| 573. |
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முதுபௌவ முந்நீர் நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும், நாடுதானும் ஊடும் ஓடி, ஞாலமும் நான்முகனும் ஊடு காண, மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே. |
உரை |
| 574. |
வழங்கு திங்கள், வன்னி, மத்தம், மாசுணம், மீது அணவி, செழுங் கல்வேந்தன் செல்வி காண, தேவர் திசை வணங்க, தழங்கு மொந்தை, தக்கை, மிக்க பேய்க்கணம் பூதம் சூழ, முழங்கு செந்தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே. |
உரை |
| 575. |
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல் அரா, நல் இதழி, சழிந்த சென்னி சைவவேடம் தான் நினைத்து, ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு மொழிந்த வாயான், முக்கண் ஆதி, மேயது முதுகுன்றே. |
உரை |
| 576. |
மயங்கு மாயம் வல்லர் ஆகி, வானினொடு நீரும் இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்த புயங்க ராக மாநடத்தன், புணர் முலை மாது உமையாள் முயங்கு மார்பன், முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே. |
உரை |
| 577. |
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும்(ம்) அறியாக் கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும், கொய் மலரால் ஏல இண்டை கட்டி, நாமம் இசைய எப்போதும் ஏத்தும் மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே. |
உரை |
| 578. |
உறி கொள்கையர், சீவரத்தர், உண்டு உழல் மிண்டர் சொல்லை நெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழுமின்! மறி கொள் கையன், வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்ட முறி கொள் மேனி மங்கை பங்கன்; மேயது முதுகுன்றே. |
உரை |
| 579. |
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை, பித்தர்வேடம் பெருமை என்னும் பிரமபுரத் தலைவன்...... |
உரை |